
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 85 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக கட்சி 81 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இரண்டு கட்சிகளிலும் மாறி மாறி முன்னிலை வகிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலையில் தொடங்கியது. பாரதிய ஜனதா கட்சியே வெற்றிபெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில் குஜராத்தில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. இதையடுத்து காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
182 சட்டசபை உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதேபோல் 68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 75.28 சதவீத வாக்குகள் பதிவாகின.
இரண்டு தேர்தல்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.