Published : 17,Dec 2017 04:32 PM
முதல்வர் தொகுதியாக இருந்த ஆர்.கே.நகரில் முன்னேற்றமே இல்லை: தமிழிசை

கையில் ஆட்சி இருந்தும், முதல்வர் தொகுதியான ஆர்.கே.நகரில் எந்த முன்னேற்றமும் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
ஆர்.கே.நகரில் வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை மறுநாளுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் ஓய்வதால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கரு.நாகராஜனுக்காக அந்த கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை, வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி கொருக்குப்பேட்டையில் நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டத்தில் தமிழிசை பிராச்சார உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது என்றார். அத்துடன் முதலமைச்சர் கையில் ஆட்சி இருந்தும் ஆர்.கே.நகர் தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக இன்று தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறுவதாக இருந்தால் மட்டுமே ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியிருப்பதாக கூறினார்.