Published : 17,Dec 2017 06:56 AM
ஆர்.கே.நகரில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்ததுள்ளதாக திமுக செயல் தலைவரும், எதிர்க்ட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பணப்பட்டுவாடா புகாரால் கடந்த முறை ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே இந்தமுறை பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் பணப்பட்டுவாடாவும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அதிமுகவினர் ஒரு ஓட்டுக்கு 6,000 ரூபாய் வரை தருவதாக திமுக குற்றம்சாட்டிவருகிறது. இதனிடையே, தலைமைச் செயலகத்தில் ஆர்.கே.நகர்
இடைத்தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “ வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி சார்பிலும், டிடிவி அணி சார்பிலும் பணம் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான புகாரை தேர்தல் சிறப்பு அதிகாரியிடம் வழங்கியுள்ளோம். 2 கோடி ரூபாய் வரை வைத்திருந்த அதிமுகவினரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தால், அது சில ஆயிரம் ரூபாய் தான் என காவல்துறை சார்பில் செய்தி சொல்லப்படுகிறது. பணப்பட்டுவாடாவுக்கு தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையும் திட்டமிட்டு உடந்தையாக இருக்கின்றனர். பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தால் கண்டும் காணாமல் இருக்கின்றனர். ஒரு ஓட்டுக்கு 6,000 ரூபாய் வீதம் 100 கோடி ரூபாய் வரை பணப்பட்டுவாடா நடைபெற்றிருப்பது தெளிவாகத் தெரிகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மேற்பார்வையின் கீழ்தான் பணவிநியோகம் நடைபெற்றிருக்கிறது. திமுகவினர் பணப்பட்டுவாடாவை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த ஆதாரமும் வழங்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா செய்பவர்கள் பிற்காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு நடவடிக்கை
தேவை. ஆனால் தேர்தலை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தவில்லை" என தெரிவித்தார்.