Published : 15,Dec 2017 04:22 PM
அறிவாலயத்திற்கு வந்தார் கருணாநிதி

தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை தந்தார்.
கடந்த ஒரு வருடமாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கருணநிதி, தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார்.
அத்துடன் திமுக நிகழ்ச்சிகளிலும் அவர் பங்குகொள்ளாமல் இருந்தார். இருப்பினும் சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலம் சற்று
குணமடைய, அவர் முரசொலி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முரசொலி பவளவிழா கண்காட்சியை வந்து பார்வையிட்டார்.
மேலும் அவரது உருவச்சிலையை கண்டு மகிழ்ந்தார். அப்போது அவர் திமுக தொண்டர்களையும் பார்த்து கை அசைத்தார்.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, கருணாநிதியை அவரது இல்லத்தில்
சென்று சந்தித்தார். அப்போது ஒருமுறை ஊடகத்தின் வாயிலாக அனைவரும் அவரை கண்டனர். இந்நிலையில் சென்னை
தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு இன்று கருணாநிதி வருகை தந்துள்ளார்.
அவருடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
இந்நிகழ்வு திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.