Published : 15,Dec 2017 09:45 AM
ஒகி புயல் பாதிப்பு: கன்னியாகுமரியில் இன்று முழுஅடைப்புப் போராட்டம்

ஒகி புயலால் விவசாயப் பயிர் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில் கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி பல்வேறு அமைப்பினரும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முழுஅடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதனால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு முதலே பேருந்துகள் நிறுத்தப்பட்டன. காலையில் பலத்த பாதுகாப்புடன் ஒரு சில பேருந்துகள் இயக்கப்பட்டன. போதிய அளவு பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ஒகி புயல் பாதிப்பில் மாவட்டம் முழுவதும் உள்ள வாழை, ரப்பர் மரங்கள் சாய்ந்தன. விவசாயப் பயிர்கள் அழிந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ரப்பர் விவசாயத்திற்கு ஒரு ஹெக்டருக்கு ஒரு லட்சம் ரூபாயும், வாழை உள்ளிட்டவைகளுக்கு 63 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அந்தத் தொகை போதாது எனவும், கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரி விவசாயிகள் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.