Published : 15,Dec 2017 08:09 AM

ஊடகங்களில் பேசப்படும் கருத்துகள் அதிமுகவின் கருத்து அல்ல: ஓபிஎஸ், ஈபிஎஸ் விளக்கம்

ops-and-eps-news-explainations

அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் தோழமைக் கட்சியினர் எனக் கூறிக்கொண்டு ஊடகங்களில் சிலர் கூறி வரும் கருத்துகள் கட்சியின் அதிகாரபூர்வ கருத்து இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களில் நடைபெறும் விவாதத்தில் அதிமுக சார்பில் கலந்து கொள்வதற்காக புதிய குழு விரைவில் அமைக்கப்படும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். மேலும் இந்தக் குழுவில் இடம்பெறுபவர்கள் மட்டுமே ஊடகங்களில் நடத்தப்படும் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று அரசின் நிலைப்பாடுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார்கள் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், அதிமுக சார்பில் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என கடந்த மாதமே கூறியிருந்தாலும் அவ்வாறு யாரும் இன்னும் நியமிக்கப்படவில்லை என இருவரும் கூறியுள்ளனர். எனவே தற்போது கட்சியின் கொள்கை நிலைப்பாடுகளையும், கருத்துகளையும் எடுத்துக்கூற யாருக்கும் ஒப்புதலோ அனுமதியோ தரப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் தோழமைக்கட்சியினர் எனக் கூறிக்கொண்டு ஊடகங்களில் சிலர் கூறி வரும் கருத்துகள் கட்சியின் அதிகாரபூர்வ கருத்து இல்லை எனவும் கூறியுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்