Published : 15,Dec 2017 07:16 AM
காணாமல் போன 700 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்: நிர்மலா சீதாராமன்

ஒகி புயலால் காணாமல் போன தமிழக மீனவர்கள் உள்பட 700 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாக்கிய ஒகி புயலால் தற்போது வரை அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. குறிப்பாக புயலின் தாக்கத்தால் குமரி மாவட்ட மீனவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். கடலுக்கு சென்ற ஏராளமான மீனவர்கள் கரைக்கு திரும்பாததால் மீனவ குடும்பங்கள் சோகத்தில் மூழ்கினர். மேலும், அவர்களை மீட்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை குறித்து ஆரம்பத்தில் இருந்தே பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன. மீனவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். இந்நிலையில், எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல் கடலில் தத்தளிக்கும் அனைத்து மீனவர்களும் மீட்கப்படுவார்கள் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து நேற்று மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 619 மீனவர்களை காணவில்லை என்று தெரிவித்திருந்தது. அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 433 பேர் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் 186 பேர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் காணாமல் போன மீனவர்கள் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்திய கப்பற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து மேற்கொண்ட மீட்புப்பணியில் நேற்று மாலை 5:00 மணி நிலவரப்படி, 5 இலங்கை மீனவர்கள் உள்பட 700 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 9 சடலங்களையும் இந்திய கடலோர காவல் படை மீட்டுள்ளது எனவும், 3 சடலங்களை இந்திய கப்பற்படை மீட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.