Published : 13,Dec 2017 11:11 AM
குஜராத்தில் நாளை 2-ஆம் கட்ட தேர்தல்: பலத்த பாதுகாப்பு

குஜராத்தில் 2-வது கட்டத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
குஜராத்தில் மொத்தமாக உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 9-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 67 சதவிகித வாக்குகள் பதிவானது. இந்நிலையில் 2-ஆம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் 851 வேட்பாளர்கள் உள்ளனர். 2-ஆம் கட்ட தேர்தலில் சுமார் 2 கோடியே 20 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு முன் எம்எல்ஏவாக இருந்த மணி நகர் தொகுதியிலும் நாளை தான் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான போலீசார் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் அசம்பாவிதம் ஏதும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதிலும் தேர்தல் ஆணையம் கவனமாக உள்ளது.
மத்திய குஜராத்தில் பாரதிய ஜனதாவும் வடக்கு குஜராத்தில் காங்கிரசும் வலுவான நிலையில் உள்ளதால் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவே ஒட்டுமொத்த முடிவை நிர்ணயிப்பதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இரு அணிகளும் தாங்களே வெல்வோம் என உறுதிபடத் தெரிவித்து வரும் நிலையில் அரியாசனத்தில் அமரப் போது யார் என்பது வரும் 18-ம் தேதி தெரியவரும். குஜராத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.