Published : 12,Dec 2017 11:38 AM
திருமண போட்டோக்களை விற்க கோலி- அனுஷ்கா முடிவு?

விராட் கோலி- அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது திருமண போட்டோக்களை விற்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தை அறக்கட்டளைக்கு வழங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலியின் மிலன் நகரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்று திருமணம் நடைபெற்றது. கோலியும், அனுஷ்காவும் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில் நேற்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, அனுஷ்கா சர்மா கோலிக்கு மாலை போடும் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் கோலி வெளியிட்டிருந்தார். இதனையடுத்து கோடிக்கணக்கான ரசிகர்கள், தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திருமணம் முடிந்தாலும் தம்பதியினரின் ஒரு சில போட்டோக்களே வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தங்களது திருமண போட்டோக்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அறக்கட்டளைக்கு வழங்க தம்பதிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பேஷன் இதழக்கு தங்களது திருமண போட்டோக்களை விற்க விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் இணைந்து முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது. திருமணம் என்பது இனிமையான நிகழ்வு. அந்த நிகழ்வில் புகைப்படம் தவிர்க்க முடியாது ஒன்று. இந்நிலையில் புகைப்படம் மூலம் கிடைக்கும் பணத்தை நல்ல காரியத்திற்கு பயன்படுத்த தம்பதிகள் முடிவெடுத்திருக்கின்றனர்.