Published : 11,Dec 2017 05:28 PM
தேர்தலை ரத்து செய்யும் நோக்கில் ஆளுங்கட்சி செயல்படுகிறது: மு.க.ஸ்டாலின்

ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்யும் நோக்கில் ஆளுங்கட்சி செயல்படுகிறது என்று பரப்புரையின் போது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
ஆர்.கே.நகரில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் மருதுகணேஷ்-க்கு ஆதரவாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தோழமை கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார்.
பரப்புரையில் பேசிய மு.க.ஸ்டாலின், ஆர்கே நகர் தேர்தலில் அதிமுக கட்சி காட்டும் அக்கறையை, புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் மீது ஏன் காட்டவில்லை. ஜெயலலிதா மரணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் பங்கு இருக்கிறது. தற்போதுள்ள தோழமை கட்சிகளுடனான கூட்டணி தொடர வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யும் நோக்கில் ஆளுங்கட்சி செயல்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில், இரு அணிகளும் இணைவதற்காகத்தான் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாக ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் கூறினர். இதனை மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் கேட்கும் நிலை இருப்பதிலிருந்தே தேர்தலை ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது தெரிகிறது. என்ன வாக்குறுதி கொடுத்தாலும் ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சி வெற்றி பெற முடியாது என்று ஸ்டாலின் பேசினார்.
பரப்புரையில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுகவுடன் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அக்கட்சி என்றும் வலிமையுடன் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்த முதல்வராவது உறுதி என்று கூறினார்
பரப்புரையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேசும்போது, டெல்லிக்கு எப்படி ராகுல் காந்தியை விட்டால் வேறு வழி இல்லையோ, அதே போல் தமிழகத்திற்கு ஸ்டாலினை விட்டால் வேறு வழியில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தோழமை கட்சியாக இணையும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.