Published : 11,Dec 2017 04:26 PM
விராட், அனுஷ்கா தம்பதியினருக்கு பிசிசிஐ வாழ்த்து

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதியினருக்கு மனப்பூர்வ வாழ்த்துகள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலி நாட்டின் மிலன் நகரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் திருமணம் நடந்துள்ளது. கோலியும், அனுஷ்காவும் 2013 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். விராட் கோலி வெளிநாடுகளுக்கு விளையாட செல்லும் போதெல்லாம் அனுஷ்காவை அழைத்துச் செல்வார். இந்தியாவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு வருகின்றனர். இடையில் 2015ஆம் ஆண்டு சிறிது காலம் பிரிந்து இருந்தாலும் மீண்டும் காதல் அவர்களை இணைத்தது.
இந்நிலையில் இன்று அவர்கள் இருவரும் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதுதொடர்பாக விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்ற வெளியிட்டுள்ளார். அதில் அனுஷ்கா ஷர்மா, கோலிக்கு மாலை அணிவிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அத்துடன் கோலி “எங்கள் குடும்பம் மற்றும் ரசிகர்களின் நல்வாழ்த்துகளால் அழகான இந்த நாள் சிறப்பானது. எங்கள் பயணத்தில் முக்கியமான அங்கமாக அமைந்த பலருக்கும் நன்றி” என்றும் தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டை குறிப்பிட்டு, ட்விட் பதிவிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அன்பான தம்பதியினருக்கு மனப்பூர்வ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அத்துடன் கோலி, அனுஷ்கா தம்பதியினரின் மனவாழ்வு செழிக்கவும் வாழ்த்தியுள்ளது.