Published : 10,Dec 2017 04:58 PM
ஆர்.கே.நகரில் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.கே.நகரில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான வாக்காளர்கள் வீடுகளில் இருப்பதையொட்டி, அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரம் செய்தனர். தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை பகுதிகளில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பிரச்சாரம் செய்தார். அவரோடு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் நிர்வாகிகள் பிரச்சாரம் செய்தனர். அப்பகுதியில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை முடித்து வந்தோரிடம் மதுசூதனன் வாக்கு சேகரித்தார்.
அதேபோல, திமுக வேட்பாளர் மருதுகணேஷ், தண்டையார்பேட்டை, சென்னியம்மன்கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். வீடுகளுக்குச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள டிடிவி தினகரன், கொருக்குப்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்தார். ஆதரவாளர்கள் பலர் உடன் சென்றனர். மேள தாளங்கள் முழங்க தொகுதிகளில் பிரச்சாரம் செய்தபடி வேட்பாளர்கள் வலம் வந்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதியில் பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தனது ஆதரவாளர்களுடன் சென்ற அவர், ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் கட்சி பலமுறை வெற்றிபெறும் இத்தொகுதி வளர்ச்சி அடையவில்லை என்றார். இந்தமுறை பாரதிய ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றால் பிரதமர் மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் இத்தொகுதி பராமரிக்கபடும் எனவும் அவர் கூறினார். விதிகளை மீறி இங்கு இருக்கும் வெளிப்பகுதி நபர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரினார்.