[X] Close

“அறிவுள்ளவன் மனிதர்களையும் இழப்பதில்லை; வார்த்தைகளையும் இழப்பதில்லை!”

Neech-aadmi-More-than-Mani-Shankar-Aiyars-remark--it-is-the-response-to-him-that-is-shocking

“வாய்க்குள் போன எதுவும் மனிதனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து வருவதுதான் தீட்டுப்படுத்தும்” என்றார் ஏசுநாதர். எதைப் பேசுவது என்பதைவிட, எதைப் பேசக் கூடாது என்று அறிந்தும் அறியாமலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விமர்சிப்பது வாடிக்கையானது என்றாலும்கூட, சில நேரங்களில் அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் மிகவும் எல்லை மீறியதாக இருக்கின்றன. இதை குறிப்பிட காரணம், பிரதமர் மோடிக்கு எதிரான காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யரின் ‘நீச் ஆத்மி’ பேச்சு. நட்பு அரசியலை கைவிட்டு வெறுப்பு அரசியல் செய்வதன் வெளிப்பாடே இதுபோன்ற விஷமத்தனமான வார்த்தைகள் வந்து விழுகின்றன.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்து அரசியல்வாதி; காங்கிரஸ் கட்சியில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு தலைவர்; மக்களவை, மாநிலங்களவை எம்.பி.யாக பல முறை பதவி வகித்தவர்; மத்திய அமைச்சராக இருந்தவர்; அப்படியான ஒருவரிடமிருந்து அமில வார்த்தை வந்திருப்பதை பார்க்கும்போது, அரசியலில் நாகரீகம், பண்பாடு, கண்ணியம் எல்லாம் இருக்கிறதா என்று சிந்திக்க வைக்கிறது.

டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, “அம்பேத்கரின் பெயரால் வாக்கு கேட்கும் சில கட்சிகள், தேசத்தை உருவாக்கியதில் இருக்கும் அவரது பங்களிப்பை அழிக்க முயல்வதாக, காங்கிரஸை மறைமுகமாக குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த மணி சங்கர் அய்யர், பிரதமர் மோடியை ‘நீச் கிஸ்ம் கா ஆத்மி’ (இழிபிறவி) என்று ஹிந்தியில் விமர்சித்தார். அப்படியென்றால் பிறப்பு அடிப்படையில் ஒருவரை தாழ்த்திப் பேசுவது. இதுகுறித்து முன்னணி ஆங்கில தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப முயன்றபோது, மைக்கை பிடுங்கி எறிந்து, அவரை ஆபாச வார்த்தையால் அர்ச்சனை செய்துள்ளார்.


Advertisement

        

மணி சங்கர் அய்யரின் பேச்சை ராகுல் காந்தி உடனடியாக கண்டிக்க, “நான் பேசியதற்கு அப்படியொரு பொருள் (இழிபிறவி) இருப்பது தெரியாது” என்று கூறி மன்னிப்புக் கேட்டார். ஆனாலும், காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மணி சங்கர் அய்யர் இப்போதுதான் இப்படி நடந்து கொள்கிறார் என்று கருதக் கூடாது. பாஜகவில் சுப்பிரமணியன் சுவாமி, ஹெச்.ராஜா போன்றோர் எப்படி அரசியல் சர்ச்சை கருத்துகளை கூறி சிக்கிக் கொள்கிறார்களோ அதேபோன்ற ‘பெருமை’ மணி சங்கருக்கும் உண்டு.

              

2015-ல் பாரீஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நியாயப்படுத்தி பேசியது; கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன், “டீ விற்றவர் ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படலாமா? நான் ஸ்டால் போட்டு தருகிறேன். அவர் டீ விற்கட்டும்” என்று மோடியை எள்ளி நகையாடியது; மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், “பெண் சக்தி மட்டும் திரண்டெழுந்தால் மோடி மீண்டும் குஜராத்துக்கே ஓடிவிடுவார். இன்னும் சற்று முயற்சித்து அவரை கடலில் கொண்டு போய் தள்ளிவிட்டால் அந்தப் பெண் சக்தியை நான் மனதாரப் பாராட்டுவேன்” என்று பேசியதெல்லாம் நினைவுக்கு வருகின்றன.

அதுமட்டுமா? பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகும் ‘துனியா’ என்ற செய்தி தொலைக்காட்சியின் விவாதத்தில் பேசிய மணி சங்கர் அய்யர், “இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடக்க வேண்டுமானால், பிரதமர் பதவியில் இருந்து மோடியை நீக்க வேண்டும்” என்று பேசியது பெருமளவில் விமர்சனத்திற்கு உள்ளானது.

மோடியை இப்படி தொடர்ந்து விமர்சிப்பது அவரது வாடிக்கையாக இருந்தாலும், மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் அவர் விட்டு வைத்ததில்லை. சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.க்களான அமர் சிங், நரேஷ் அகர்வால் போன்றோரிடம் சண்டை வருமளவுக்கு நடந்து கொண்டது எல்லாம் வரலாறு. 2013-ல் நாடாளுமன்றத்தில் ஒரு சம்பவம். ஜம்மு - காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது பற்றி எதிர்க்கட்சிகள் ஆவேசமாக எழுப்பின. ஒரு கட்டத்தில், மணி சங்கருக்கும், நரேஷ் அகர்வாலுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மணி சங்கரை பார்த்து, “நீ ஒரு பாகிஸ்தான் உளவாளி” என நரேஷ் அகர்வால் கூறினார். இதனால் முகம் சிவந்த மணி சங்கர், கைகளை முறுக்கியபடி, “என்னைப் பார்த்து இப்படி சொல்ல, உனக்கு என்ன தைரியம்” என்று அடிக்கப் பாய்ந்தார்.

            

விமர்சனங்களைத் தாங்கும் சகிப்புத்தன்மையின்மை இல்லாத ஒரு சில தலைவர்களின் பேச்சுகளும், செயல்பாடுகளும், அரசியலின் தரத்தை கீழ்நோக்கி செல்ல வைக்கிறது. நாகரீகம், பண்பாடு, கண்ணியம் போன்றவை சிதைந்து, வெறுப்பு அரசியல், சா‘தீ’ய அரசியல், மத அரசியல் மேலோங்கி வருவது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. அதேநேரத்தில், காங்கிரஸின் பண்பாடும், பாரம்பரியமும் இதுபோன்ற பேச்சுகள் அல்ல என்று, மணி சங்கர் அய்யரை கண்டித்த ராகுல் காந்தியின் செயல்பாடு வரவேற்புக்குரியது; பாராட்டுக்குரியது.

குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் சமயத்தில் இப்படி பேசியது, காங்கிரஸூக்கு எதிராக போய்விடுமோ என்ற அரசியல் அச்சத்தில் இந்த நடவடிக்கையை ராகுல் எடுத்திருக்கிறார் என்று ஒரு சிலர் விமர்சிக்கின்றனர். என்றாலும் காங்கிரஸில் ஒரு மூத்த தலைவர் மீது ராகுல் துணிந்து நடவடிக்கை எடுத்திருப்பதற்கு உள்நோக்கம் கற்பிப்பது சரியாக இருக்காது; இது கண்ணியமான அரசியல். காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்கவுள்ள நிலையில் இதுபோன்ற சர்ச்சை பேச்சுக்கு உடனே எதிர்வினையாற்றியது ராகுலின் தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறது.

          

பிரதமர் மீது அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக விமர்சிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், சாதிய ரீதியிலான விமர்சனம் என்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். பிறரை விமர்சிப்பதில் மணி சங்கர் அய்யர் போன்ற அறிவார்ந்தவர்கள் மட்டுமல்ல, எவர் ஒருவரும் எல்லைமீறிவிடக் கூடாது; “அறிவுள்ளவன் மனிதர்களையும் இழப்பதில்லை; வார்த்தைகளையும் இழப்பதில்லை” என்று தத்துவ ஞானி கன்ஃபூஷியஸ் சொல்கிறார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close