Published : 10,Dec 2017 12:09 PM
தந்தையையும் கொல்ல திட்டமிட்ட தஷ்வந்த்: திடுக்கிடும் தகவல்

தாயை அடித்து கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படும் தஷ்வந்த், தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமி ஹாசினி கொலைக் குற்றவாளி தஷ்வந்திடம், பெற்ற தாயை கொலை செய்த வழக்கில் மும்பையில் கைது செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். பின்னர் கொலை நடந்த இடத்திற்கு அவரை அழைத்துச் சென்று சம்பவம் குறித்து தனிப்படைக் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது, தனது தாயை சுத்தியலால் அடித்துக் கொன்றதாக ஒப்புக் கொண்டதாகவும், தந்தையையும் கொல்ல திட்டமிட்டதாகவும் தஷ்வந்த் கூறியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு உதவிய தாஸ், டேவிட் ஆகிய இருவரை புழல் அருகே காவல்துறையினர் கைது செய்தனர். தஷ்வந்திடம் முழு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, அவரை போலீசார் சிறையில் அடைக்க உள்ளனர். பல்வேறு வழக்குகள் அவர் மீது உள்ளதால் மீண்டும் குண்டர் சட்டம் பாயும் எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், சிறுமி ஹாசினி கொலை வழக்கு விசாரணையையும் இந்த மாத இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.