
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான பணப்பலன்களை வழங்குவதில் உள்ள தாமதத்தை கண்டித்து வரும் 14 மற்றும் 15 தேதிகளில் அனைத்து போக்குவரத்து மண்டல தலைமையகம் முன்பும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தொழிற்சங்கத்தினர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை வழங்காமல் அவர்களை வெறுங்கையுடன் அரசு வீட்டுக்கு அனுப்பவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மிக குறைந்த ஊதியம் தரப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே நடத்திய போராட்டத்தை கைவிடுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம் தங்கள் பிரச்னையை தீர்க்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வரும் 13ஆம் தேதி மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவதோடு 14 மற்றும் 15ஆம் தேதிகளில் அனைத்து போக்குவரத்து மண்டல தலைமையகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 15ஆம் தேதி மாலைக்குள் அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை ஏற்காவிடில் அன்று மாலை அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.