
குஜராத் மாநிலத்தில் கரை ஒதுங்கிய மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான டீசல் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ‘ஒகி’ புயல் காரணமாக, பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மாயமாகினர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மாயமான மீனவர்களில் பலர் பல்வேறு மாநிலங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். குறிப்பாக தமிழக மீனவர்கள் 700 பேர் குஜராத் மாநிலத்தின் வேரவல் கடற்பகுதியில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர்.
அவர்களின் தேவைகளை அறிந்து கொள்ளும் விதமாக புதிய தலைமுறை நேரடியாக குஜராத்திற்கே சென்றுள்ளது. அப்போது புதிய தலைமுறையிடம் பேசிய மீனவர்கள், குஜராத்தில் இருந்து ஊர் திரும்ப படகுகளுக்கு தேவையான எரிபொருட்கள் மற்றும் தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து குஜராத், மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவில் கரைசேர்ந்த தமிழக மீனவர்களை அழைத்து வருவதற்காக, ஒரு விசைப்படகிற்கு வழங்கப்படும் டீசலை 1000 லிட்டராக உயர்த்தி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் கரை ஒதுங்கிய மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான டீசல் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இது மீனவர்கள் தமிழகம் திரும்ப பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.