Published : 07,Dec 2017 01:00 PM
விஷாலைக் கண்டு பயப்பட அவர் சூரப்புலி அல்ல: ராஜேந்திர பாலாஜி

நடிகர் விஷாலைக் கண்டு நாங்கள் பயப்பட அவர் ஒன்றும் சூரப்புலி அல்ல என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக விஷால் தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த விஷால், தன்னைக் கண்டு ஏன் மற்ற அரசியல் கட்சியினர் பயப்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் தான் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், அப்பகுதி மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக சென்னையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த ராஜேந்திர பாலாஜி, “விஷால் முதலில் கவுன்சிலர் தேர்தலில் நின்று வேட்புமனு தாக்கல் செய்யப் பழகிக்கொண்டு, அதன்பிறகு எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் விவரமே இல்லாமல் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போல் நினைத்துக்கொண்டு ஆர்.கே நகர் தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டார். அவர் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட முன்மொழிந்தவர்கள் அந்தத் தொகுதி நபர்களாக இருக்க வேண்டும். அவ்வாறே இருந்தாலும் அழைத்து விசாரிக்கும் போது அவர்கள் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்ததை உறுதி செய்யவேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு ஆட்களை காணவில்லை என விஷால் கூறுவது விளையாட்டான செயலா? என்ற கேள்வியை எழுப்புகிறது. விஷாலை கண்டு நாங்கள் பயப்படும் அளவிற்கு அவர் ஒன்றும் சூரப்புலி அல்ல” என்று கூறினார்.