வியாபாரிகள் மட்டுமல்ல விவசாயிகளும் கோபத்தில்... குஜராத் கள நிலவரம்

வியாபாரிகள் மட்டுமல்ல விவசாயிகளும் கோபத்தில்... குஜராத் கள நிலவரம்
வியாபாரிகள் மட்டுமல்ல விவசாயிகளும் கோபத்தில்... குஜராத் கள நிலவரம்

குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக மீது, பட்டிதார் சமூகத்தை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமல்லாமல், சவுராஸ்டிரா விவசாயிகளும் கோபத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

நாடே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் குஜராத் தேர்தலில், ஆளும் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்குமா அல்லது பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி நடைமுறை, இடஒதுக்கீடு பிரச்னைகள், விவசாயிகளின் பிரச்னைகளால் ஆட்சியை இழக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள ராகுல் காந்திக்கு குஜராத் தேர்தல் முதல் சோதனைக் களம் என்பதால் அக்கட்சியும் இம்முறை இயன்றவரை போராடி வருகிறது.

காங்கிரஸ் கட்சி அனைத்து சமூதாயத் தலைவர்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய பாஜக எதிர்ப்பு அணியை உருவாக்கியுள்ளது. காங்கிரஸின் வியூகம் இம்முறை வெற்றி பெறுமா அல்லது பாஜக தனது வெற்றிப் பயணத்தை தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால், பட்டிதார்கள் எனப்படும் படேல் சமூகத்தை சேர்ந்த வியாபாரிகள், எப்படி பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார்களோ, அதுபோல அச்சமூகத்தை சேர்ந்த விவசாயிகளும், விதை, உரம், எந்திரங்களின் விலை உயர்வாலும், விளை பொருட்களின் விலை வீழ்ச்சியாலும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாகவும், ஆளும் அரசின் மீது கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படேல் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வேண்டும் என்று ஹர்திக் படேல் தலைமையிலான இளைஞர்கள் தீவிர போராட்டங்களை மேற்கொண்டனர். ஆனால் மாநில பாஜக அரசு, அவர்களின் கோரிக்கையை நிராகரித்ததோடு, அவர்களின் எழுச்சிமிகு போராட்டங்களை வழக்குகள் போட்டு முடக்கினர்.

அதேபோல், பட்டிதார்கள் அதிகம் உள்ள சவுராஷ்டிரா பகுதி விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக சவுராஷ்டிரா பகுதியில் உள்ள பருத்தி மற்றும் நிலக்கடலை விவசாயிகள், உள்ளீட்டு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், உற்பத்தி பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு குஜராத் பகுதியில் உள்ள 11 மாவட்டங்கள் சவுராஷ்டிரா பிரதேசம் என்றழைக்கப்படுகிறது. மொத்தம் உள்ள 182 எம்.எல்.ஏக்களில் 48 எம்.எல்.ஏக்கள் இந்த சவுராஷ்டிரா பகுதியில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 20 கிலோ பருத்திக்கு அரசு ரூ.900 வழங்குகிறது. ஆனால் பணம் கிடைக்க 50 நாட்கள் ஆகிறது. இதனால் விவசாயிகள், தனியாருக்கு விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. தனியாரிடம் ரூ.500 முதல் 600 வரை மட்டுமே கிடைக்கிறது. அதேபோல், நிலக்கடலை விவசாயி ஒருவர், தன்னுடைய விளைபொருளை விற்பனை செய்ய 2 மாதங்களாக காத்திருப்பதாக கூறுகிறார். தங்களுக்கு விளைச்சல் நன்றாக இருப்பதாகவும், ஆனால் அதற்கு உரிய வருமானம் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

பருத்திக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.1,500 வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை என்பது விவசாயிகளின் அதிருப்தியாக உள்ளது. குஜராத்தில் உள்ள 60 மில்லியன் பேர்களில் 57 சதவிகிதம் பேர் கிராமங்களில் வாழ்கின்றனர். மாநிலத்தின் 20 மில்லியன் தொழிலாளர்களில், 4.8 மில்லியன் பேர் வேளாண் தொழிலாளர்கள், 4.5 மில்லியன் மக்கள் நிலவுடைமையாளர்கள். இவர்களின் வருமானம், வேளாண் பொருட்களுக்கான அரசின் விலை நிர்ணயத்திலேயே இருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளாக பருத்தி விவசாயிகளுக்கு மிகவும் மோசமான காலகட்டமாக இருந்ததாகவும், நிலக்கடலையைப் பொறுத்தவரை வரலாறு காணாத விளைச்சலை எடுத்தபோதும், விவசாயிகளால் போதிய வருமானம் ஈட்ட முடியவில்லை என்றும், விளைச்சலைக் கொண்டாட முடியவில்லை என்பதும் சவுராஷ்டிரா பகுதியின் கள நிலவரமாக உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com