Published : 06,Dec 2017 08:32 AM

ராகுலின் அரசியலே, காங்கிரஸின் எதிர்காலம்!

Rahul-s-politics--the-future-of-Congress

இந்திய அரசியல் வரலாற்றில் பழமையும், பாரம்பரியமும், சிறப்பும் மிக்க கட்சிகளில் ஒன்று காங்கிரஸ். 1885ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தக் கட்சிக்கு, இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற கட்சி என்னும் புகழ் உண்டு. மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் தலைமையின் கீழ் கட்சியும், ஆட்சியும் நாடு முழுவதும் வலுவாக இருந்தது.

ராஜீவ் காந்தியின் படுகொலையை தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க காங்கிரஸ் கட்சி சின்னாபின்னமாகும் சூழலை சந்தித்தது. பல்வேறு மூத்த தலைவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று காங்கிரஸை சிதைத்தனர். இந்த சூழலில் அரசியலில் தாமரை இலை தண்ணீர் போல இருந்த சோனியா காந்தி, கட்சியில் பிளவு ஏற்படுவதை தடுக்கவும், கட்சியை வழிநடத்தி செல்லவும் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

ராஜீவ் மரணத்திற்கு பிறகு காங்கிரஸ் வழிதெரியாமல் இக்கட்டான நிலையில் இருந்தபோது, சோனியா எடுத்த இந்த முடிவால் நாடு முழுவதும் காங்கிரஸ் புத்துயிர் பெற்றது; தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். சீதாராம் கேசரியின் பதவி பறிக்கப்பட்ட பிறகு, 1998ஆம் ஆண்டு மார்ச் 14இல் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார் சோனியா. அந்த காலத்தில் கடும் சவால்கள் அவருக்கு காத்திருந்தன. கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டிய நிலை. பிறகு, காங்கிரஸூக்கு இணையாக வேகமான வளர்ச்சியை பெற்று வந்த பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய தருணமாக மாறியிருந்தது.

சோனியாவின் திறமையும், தலைமைப் பண்பும் காங்கிரஸூக்கு புத்துயிர் ஊட்டியது என்றே சொல்ல வேண்டும். தலைவர்களை ஒருங்கிணைத்து, தொண்டர்களை ஒற்றுமைப்படுத்தி, மத்தியில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் (2004-2014) காங்கிரஸை ஆட்சி செய்ய வைத்தார். ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு தோற்று ஆட்சியை இழந்தது காங்கிரஸ். 44 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அதன்பிறகு காங்கிரஸின் செல்வாக்கு, ஆட்சியிலும், கட்சியிலும் சரிந்து கொண்டே இருக்கிறது.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியை பாரதிய ஜனதா கட்சியிடம் பறிகொடுத்து நிற்கிறது அல்லது வெற்றி பெற முடியாமல் போயிருக்கிறது. நாட்டையே ஆண்ட கட்சியான காங்கிரஸ் தற்போது 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது. அதில் வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவு காங்கிரஸை ‘கை’விடும் நிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இப்படியான மிகவும் சிக்கலான காலக்கட்டத்தில் தனது 19 ஆண்டுகால தலைமைப் பொறுப்பில் இருந்து விலகி மகனுக்கு வழிவிட்டுள்ளார் 70 வயதாகும் சோனியா. 2013ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்து வரும் ராகுல் காந்தி தற்போது தலைவராகிறார். 47 வயதான ராகுல், நேரு குடும்பத்தில் இருந்து தலைவராகி காங்கிரஸை வழிநடத்தப் போகும் ஆறாவது நபர். மிகவும் இளம் வயதில் தலைவர் பொறுப்பேற்கவுள்ள ராகுல் காந்திக்கு முன்னால், சோனியாவுக்கு இருந்தது போலவே சவால்கள் காத்திருக்கின்றன.

சோனியா தனது உடல்நிலையை மட்டும் காரணம்காட்டி ராகுலிடம் கட்சியை ஒப்படைத்துவிடவில்லை. ராகுல் காந்தியை அரசியலுக்குப் பக்குவப்படுத்திதான் கட்சியை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார். ராகுலை தலைவராக்க வேண்டும் என்று, மூத்த தலைவர்களும், தொண்டர்களும் சில ஆண்டுகளாக கூறிவந்த போதெல்லாம், அவருக்கு படிப்படியாக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. சோனியாவின் உடல்நிலை சரியில்லாமல் போனதால், கட்சிப் பணிகளில் முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடுக்கும் நிலையில் இருந்து வழிநடத்தி வந்தார். ஆனால், 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது ஒரு பதவியையையும் ராகுல் வகிக்கவில்லை; எனவே அவரது நிர்வாகத்திறன் வெளிப்படவில்லை.

2013இல் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ராகுலுக்கு சோதனைக்களமாக மாறியது. ஆனால், தேர்தலில் தோல்வி. அதன்பிறகு அவர் தலைமையில் பல்வேறு மாநில தேர்தல்களை சந்தித்ததிலும் வெற்றிகிட்டவில்லை. தற்போது தலைவர் பொறுப்புக்கு வந்திருக்கும் நேரம், ஹிமாச்சல் பிரதேசம், குஜராத் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் காத்திருக்கின்றன. இதில் குஜராத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு கெளரவப் பிரச்னையாகவே இருக்கிறது.

ஏனெனில் குஜராத்தில் காங்கிரஸால் 22 ஆண்டுகளாக ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இம்முறை எப்படியும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று, சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் ராகுல். அதற்கேற்ப தற்போது தலைவர் பதவியையும் ஏற்கிறார். இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? காங்கிரஸ் தொண்டர்களுக்கு புது ரத்தம் பாய்ச்சுமா? என்பது தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டுவிடும். ஆகவே குஜராத் தேர்தல், ராகுல் காந்தியின் அரசியல் ஆளுமைக்கும், அவரது தலைமைப் பண்புக்கும் ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது.

இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் உட்கட்சித் தேர்தலை நடத்தி, இளம் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். பல மாநிலங்களில் தலைமைப் பொறுப்பில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். ஒருபுறம் ராகுலின் செல்வாக்கு அதிகரித்து வந்தாலும், அவரது கருத்துகளையும், செயல்பாடுகளையும் அரசியல் ரீதியாக கேலி கிண்டலுக்கு உள்ளாக்கி மக்களின் மத்தியில் பாரதிய ஜனதா பிரச்சாரம் செய்வதால், ராகுல் எடுபடாமல் இருக்கிறார்.

வலிமை வாய்ந்த மோடியின் அரசியலுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு ராகுல் வருவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். காரணம், ஆட்சி, அதிகாரம் என்று எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறார் மோடி. பாரதிய ஜனதாவை மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி நேருக்கு நேர் நின்று எதிர்த்து அரசியல் செய்யும் அளவிற்கு காங்கிரஸ் வலுவான கட்டமைப்புடன் இல்லை. எனவே, பாரதிய ஜனதா மற்றும் மோடியின் வளர்ச்சிக்கும், பலத்திற்கும் ஈடுகொடுக்கும் வகையில் காங்கிரஸை வலுப்படுத்த வேண்டிய மிகப்பெரிய சவால் ராகுலிடம் இருக்கிறது.

ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தல் முடிவுகளுக்குபின் காங்கிரஸின் எதிர்காலம் இருள்சூழ்ந்து காணப்படும் என, டெல்லி மூத்தப் பத்திரிகையாளர்கள் கணிக்கின்றனர். இதுபோன்ற நிலையில் காங்கிரஸாரின் எதிர்பார்ப்புகள், எண்ணங்களை பூர்த்திசெய்வாரா? 2019இல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸூக்கு அரியணை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவாரா? என்ற சவாலான கேள்விகளெல்லாம் ராகுல் முன் நிற்கிறது. எனவே, 132 ஆண்டுகள் பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம், ராகுலின் ‘கை’யில் இல்லை. அவரது அரசியலில் இருக்கிறது.!

 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்