
ஆர்.கே.நகரில் பரப்புரை மேற்கொள்ளப்போவதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருதுகணேஷும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கருநாகராஜன் போட்டியிடுகிறார். இவர்களுடன் சுயட்சையாக நடிகர் விஷாலும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் பொதுச்செயலாளர் தீபாவும் போட்டியிடுகின்றனர். இதில் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துவித்துள்ளன.
இந்நிலையில் விவசாயிகளை எதிர்ப்பவர்களை ஆதரிக்காதீர்கள் என இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகரில் பரப்புரை மேற்கொள்ளப்போவதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். இதற்காக திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் ரயில் மூலம் சென்னை வந்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாதவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா என மக்களிடமே நியாயம் கேட்கப்போவதாகவும் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.