Published : 05,Dec 2017 07:37 AM

குஜராத்தில் காற்று திசை மாறுகிறதா?: கருத்துக்கணிப்புகள் கூறும் செய்தி என்ன?

Gujarat-Assembly-elections--Close-context-between-BJP-and-Congress

சமீபத்திய கருத்துக்கணிப்புகளின் படி, குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சமவாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

குஜராத்தில் வரும் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாடே உற்று நோக்கிக் கொண்டிருக்க கூடிய தேர்தலாக இது அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சியமைத்து வருகிறது. பிரதமர் மோடியின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளான பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி நடைமுறை ஆகியவற்றால் குஜராத்தின் பெரும்பான்மை மக்களான வியாபார சமூகத்தினர் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் அவர்கள் பாஜக அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

        

படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டங்களை மாநில பாஜக அரசு மூர்க்கத்தனமாக ஒடுக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் படேல் சமூக இளைஞர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. எனவே படேல் சமூக தலைவர் ஹர்திக் படேலின் பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு பாஜகவுக்கு எதிராக தீவிர பரப்புரையிலும் ஈடுபட்டுள்ளது.

        

மேலும், ஜிக்னேஷ் மேவானி தலைமையிலான ராஷ்ட்ரிய தலித் அதிகார் மஞ்ச் இயக்கமும் பாஜகவுக்கு எதிர்நிலை எடுத்துள்ளது. இந்த அமைப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. மேலும், ஜிக்னேஷ் மேவானி வட்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தாததோடு, அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது. இதனாலேயே, காங்கிரஸ் கட்சி குஜராத்தில் ஜாதி அரசியல் செய்வதாக பாஜக தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது.

        

இந்நிலையில், லோக்நிதி - சி.எஸ்.டி.எஸ் - ஏ.பி.பி செய்திகள் நடத்திய இறுதிகட்ட கருத்துக்கணிப்புகளின் படி பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் 43 சதவிகித வாக்குகளைப் பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மாலை வெளியான இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, பாஜகவின் வாக்கு சதவிகிதம் 16 சதவிகிதம் சில மாதங்களில் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது இதே அமைப்புகள் கடந்த ஆகஸ்ட் மாதம் எடுத்த கருத்துக்கணிப்பில் பாஜக 59 சதவிகித வாக்குகள் பெறும் என்றும், நவம்பர் இறுதி வாரத்தில் எடுத்த கருத்துக்கணிப்பில் 43 சதவிகித வாக்குகள் பெறும் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில் 22 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இது முக்கியமான காலகட்டம். கடந்த ஆகஸ்ட் மாத கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் 29 சதவிகித வாக்குகள் பெறும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியானது. நவம்பர் இறுதி வாரத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் படி அக்கட்சியின் வாக்குகள் 14 சதவிகிதம் உயர்ந்து 43 சதவிகிதமாக உள்ளது. எனவே பாஜகவும், காங்கிரசும் சமமான வாக்குகள் பெறும் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.

        

அதேபோல், ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடும்போது பிரதமர் மோடியின் புகழ் 82 சதவீதத்திலிருந்து 18 புள்ளிகள் குறைந்து 64 சதவிகிதமாகியுள்ளதாகவும், ராகுல் காந்தியின் புகழ் 40 சதவிகிதத்திலிருந்து 57 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் இந்த புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த மிகப்பெரிய மாற்றம் குஜராத்தின் வியாபார சமூகத்தாலேயே நிகழ்ந்துள்ளதாகவும் இந்த கருத்துக்கணிப்புகள் தெளிவாகக் கூறுகின்றன.

குறிப்பாக, இம்முறை பெண்களுடைய வாக்குகள், காங்கிரசுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முந்தைய கணிப்புகளின் படி, பாஜகவுக்கான பெண் வாக்காளர்களின் ஆதரவு 50 சதவிகிதமாக இருந்ததாகவும், காங்கிரசுக்கான ஆதரவு 39 சதவிகிதமாக இருந்ததாகவும், நவம்பர் மாத கருத்துக்கணிப்புகளின் படி, பாஜகவுக்கான ஆதரவு 42 சதவிகிதமாகவும், காங்கிரசுக்கான பெண்களின் ஆதரவு 44 சதவிகிதமாகவும் மாறியுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

        

லோக்நிதி - சி.எஸ்.டி.எஸ் - ஏ.பி.பி செய்திகள் நடத்திய இந்த கருத்துக்கணிப்புகள் கடந்த நவம்பர் 23 முதல் 30 ஆம் தேதி வரை, 50 தொகுதிகளில் உள்ள 200 வாக்கு மையங்களில் 3,655 வாக்காளர்களிடம் நடத்தப்பட்டது என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்