Published : 04,Dec 2017 06:41 AM
மீனவர்கள் என்ன மிருகங்களா? எங்கள் உயிர் அரசுக்கு தெரியவில்லையா?: உறவினர்கள் கண்ணீர் பேட்டி

மீனவர்கள் என்ன மிருகங்களா, எங்களது உயிர் தமிழக அரசுக்கு உயிராக தெரியவில்லையா என்று கடலுக்கு சென்று திரும்பாத மீனவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி கிராமத்தைச் சேர்ந்த 10 படகுகளில் சென்ற 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. மீனவர்களின் நிலை தெரியாமல் 4 நாட்களுக்கு மேலாக தவித்து வருவதாக குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். காணாமல் போன மீனவர்களின் மீட்டு ஒப்படைக்குமாறு குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலுக்கு சென்ற தனது கணவர் கரை திரும்பவில்லை என்று கூறிய பெண் ஒருவர் புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசும்போது, “எங்களது உயிர் தமிழக அரசுக்கு உயிராக தெரியவில்லையா? நாங்கள் என்ன மிருகங்களா?. காப்பாற்ற முடியவில்லை என்றால் எங்களை கேரளாவுக்கு விடுங்கள். படித்துக் கொண்டிருக்கிற பிள்ளைகள் ஏன் கடலுக்கு செல்கிறார்கள். படித்த பிறகு வேலைக்கு செல்லாததால்தான். டாக்டர், கலெக்டர், அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்குதான் நல்ல வேலை கொடுக்கிறீர்கள். ஏழை கிராமத்தில் படித்து வரும் பிள்ளைகளுக்கு எங்கே வேலை கொடுக்கிறீர்கள். 5 நாட்களுக்கு முன்னாடி நடவடிக்கை எடுத்திருந்தால் என் கணவர் வீட்டில் இருந்திருப்பார். எங்களுக்கு எந்த நிவாரண உதவியும் வேண்டாம், அவர்களை மட்டும் கரை சேர்த்துங்கள்” என்று கூறினார்.