
ஒகி புயலால் கடலில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 600 மீனவர்கள் குஜராத்தில் கரை ஒதுங்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஒகி புயலால் கடலுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களின் குடும்பங்களை சேர்ந்த பெண்கள்
கண்ணீருடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்திய கடலோரப்படை மற்றும் விமானப்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களை மீட்க
வேண்டும் என அவர்களின் குடும்பத்தார் அழுத வண்ணம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே லட்சத்தீவு மற்றும் கேரள பகுதிகளில்
நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை ஒதுங்கியுள்ளனர். மகாராஷ்டிராவிலும் தமிழக மற்றும் கேரள மீனவர்கள் கரை ஒதுங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் 600 பேர் குஜராத்தில் கரை ஒதுங்கியுள்ளதாக, கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதி மீனவர் பிபின் புதிய தலைமுறைக்கு
தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, 40 விசைப்படகுகளை சேர்ந்த தமிழக மீனவர்கள் கரை ஒதுங்கியுள்ளோம். மேலும் 20
விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்னும் கரை திரும்ப வேண்டியுள்ளது. ஒகி புயலால் திசை மாறிச் வந்துள்ள தமிழக மீனவர்களை குஜராத்
துறைமுகத்திற்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கின்றனர். தமிழக மீனவர்கள் யாருக்கும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று
கூறினார்.