கோலி கவசம் அணியலையே..! பயிற்சியாளர் கேள்வி

கோலி கவசம் அணியலையே..! பயிற்சியாளர் கேள்வி
கோலி கவசம் அணியலையே..! பயிற்சியாளர் கேள்வி

இந்தியா - இலங்கை இடையே 3-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. காற்று மாசு தாக்கம் காரணமாக வெளிச்சம் குறைவாக காணப்பட்டது. 2-வது நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இலங்கை வீரர்கள் காற்று மாசு பிரச்சினையை கிளப்பினர். 

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் கமகே, மூச்சு விட சிரமப்படுவதாக நடுவர்களிடமும் புகார் தெரிவித்தார். இதனால் 17 நிமிடங்கள் ஆட்டம் தாமதமானது. இதையடுத்து நடுவர்களின் அனுமதியுடன் இலங்கை கேப்டன் சண்டிமால், மேத்யூஸ் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடினர். 

மேலும் இரண்டு முறை இதே பிரச்சினைக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் இந்திய கேப்டன் விராத் கோலி அதிருப்தி அடைந்தார். கோலி ஆட்டம் இழந்ததும் இலங்கை வீரர்கள் சுவாச கவசத்தை கழற்றி விட்டனர். இதே போல் அவர்கள் பேட் செய்த போதும் அதை அணியவில்லை. இதையடுத்து இலங்கை வீரர்களை, ரசிகர்கள் ட்விட்டரில் வறுத்தெடுத்துவிட்டனர். 

இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறும்போது, ‘விராத் கோலி 2 நாட்கள் முழுமையாக பேட்டிங் செய்திருக்கிறார். அவருக்கு எந்த சுவாச கவசமும் தேவைப்படவில்லை. சீதோஷ்ண நிலைமை இரண்டு அணிக்கும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. ஆனால் எங்களது வீரர்களுக்கு இதில் எந்த உடல்நலக்கோளாறும் வரவில்லையே’ என்றார்.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com