[X] Close

ஜிஎஸ்டிக்கு பிறகு சினிமா எப்படி இருக்கு? 

after-gst-in-tamil-cinema-collection-special-story

ஜி.எஸ்.டி.க்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சினிமா டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது. மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகளில் குறைந்த பட்சமாக 50 ரூபாய் கூடியது. அதிக பட்சமாக 150 ரூபாய் ஏறியது. சினிமா என்பது வாழ்க்கையில் ஒரு அங்கம் இல்லை. ஆனால் அது வாழ்க்கையை அழகாக்கும் ஒரு ஏற்பாடு. அதற்கு இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என மக்கள் ஒரு கோட்டை வகுத்து வைத்திருக்கிறார்கள். அது எல்லை மீறும் போது சில எதிர்வினைகளும் வரத்தான் செய்ய்யும். ஜிஎஸ்டிக்கு பின் சினிமா நிலவரம் என்ன? 

இது குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதரிடம் பேசினோம். 
“ஜிஎஸ்டி அறிமுகமான உடன் திரைக்கு வந்த படம் ‘விக்ரம்வேதா’. பலரும் பயந்து போய் உட்கார்ந்திருந்தோம். என்ன ஆகுமோ? இனி சினிமா பிழைக்குமா? என யோசித்து கொண்டிருதோம். அந்த சமயம் பார்த்து வந்த விக்ரம்வேதா பெரிய நம்பிக்கையை கொடுத்தது. அதான் உண்மை. அந்தளவுக்கு மக்கள் அதற்கு ஆதரவு கொடுத்தார்கள். அதே போல ஜிஎஸ்டிக்கு பின்னால வந்த படம்தான் ‘அவள்’. அது ஒன்றும் நேரடி தமிழ் படம் இல்லை. ஆனால் அது ஏழு கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. அதிக பட்சமாக பார்த்தால் 65 லட்சம் வரை இந்தப் படத்தின் பட்ஜெட் இருக்கலாம். 65 லட்சம் போட்டு ஒரு படம் ஏழு கோடி வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய லாபமான படம் என்றால் அது ‘அவள்’ தான். 


Advertisement


அடுத்து ‘அறம்’. படம் வெளி வந்தப் போது பெரிய வரவேற்பு இல்லை. ஆனால் அந்தப் படம் இரண்டாவது வாரத்திற்கு பிறகு பெரிய பிக் அப். ஆடியன்ஸ் வந்து கொண்டே இருக்காங்க. இந்தப் படம் பெரிய பட்ஜெட் படமும் இல்லை. இப்ப வந்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ நல்ல கலெக்‌ஷன். திருப்தியான வசூல். பருத்திவீரனுக்கு அப்புறம் கார்த்திக்கு பல படங்கள் பெரிய அளவுக்கு வரவேற்பில்லை. பல ப்ளாப் கொடுத்துவிட்டார் அவர். காஷ்மோரா படு மோசமான வசூல். அந்த நெகட்டிவ் இமேஜ்ஜில் இருந்து கார்த்தியை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது தீரன் அதிகாரம் ஒன்று.  
முதல் வாரம் 100 சதவீதம் வசூல். இரண்டாவது வாரம் 85 சதவீதம் வசூல். இந்த வசூலே பெரிய சாதனை. இப்ப வெளி வந்துள்ள அண்ணாதுரைக்கு ஆளே இல்லை. திருட்டுப் பயலே ஆடியன்ஸே இல்ல. அண்ணாதுரைக்கு 60 சதவீத ஆடியன்ஸ் கூட வரல. திருட்டு பயலே2 வுக்கு 30 சதவீத ஆடியன்ஸ் இல்ல. அதான் உண்மை. ஜிஎஸ்டிக்கு பிறகு வந்த படங்களில் பெரிய நஷ்டத்தை கொடுத்தப்படம் ‘விவேகம்’. 


இந்தப் படம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை நஷ்டம். இது சம்பந்தமாக தயாரிப்பாளர் சங்கத்தில் பேசிக் கொண்டிருக்கிறோம். அஜித்தை பார்த்து பேசவும் இருக்கிறோம். கதையை வைத்து முடிவு செய்துதான் மக்கள் இப்பொழுது படத்திற்கு வருகிறார்கள். முன்பு போல சும்மா இருக்கிறோம். ஒரு படத்திற்கு போவோம் என்று யாரும் வருவதில்லை. அதுதான் ஜிஎஸ்டி ஏற்படுத்திய பெரிய பாதிப்பு. 
ஆகவே அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம். 28 சதவீத ஜிஎஸ்டியை 18 சதவீதமாக குறைத்தால் மகிழ்ச்சி. அதே போல 18 சதவீத வரியை 12 ஆக குறைக்க வேண்டும். இப்போது நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் 266 பொருட்களின் ஜிஎஸ்டியை குறைத்துள்ளது மத்திய அரசு. அதைப் போல சினிமாவுக்கும் ஒரு சில சதவீகித வரியை குறைக்க வேண்டும்” என்கிறார் அவர். 

சினிமா உள் விவகாரங்களை அதிகம் தெரிந்தவர் தயாரிப்பாளர் தனஞ்செயன். அவர் என்ன சொல்கிறார்?
“இப்போது இருக்கிற ஜிஎஸ்டி அளவு அதிகம்தான். சினிமாவை தியேட்டருக்கு வந்துதான் பார்க்க வேண்டும் என யாரும் இப்போது காத்துக்கொண்டிருப்பதில்லை. ஒரு படம் வெளியான உடனேயே பல வழிகளில் அவர்களுக்கு போய் விடுகிறது. அதுவும் ஹெச்டி போன்ற தரமான வடிவத்தில் தரவிறக்கம் செய்து கொள்கிறார்கள். 


Advertisement


110 ரூபாய் இருந்த ஒரு டிக்கெட் 156 ரூபாய் உயர்ந்துவிட்டது. அது மக்களுக்கு சுமைதான். இந்த வரி ஏற்றத்திற்கு பின் 30 சதவீதம் வழக்கமாக வரும் ஆடியன்ஸ் குறைந்து விட்டார்கள். ஹார்ட் கோர் ஆடியன்ஸ் என சினிமா உலகில் சொல்லப்படும் ஆடியன்ஸ் அளவு குறைந்துள்ளது. எல்லா படங்களிலும் அதே அளவு இருக்கிறது என்று கூற முடியாது. மெர்சல் போல திரைப்படங்களை தியேட்டர் வந்து பார்க்கிறார்கள். ஆனால் திருட்டுப்பயலே2 போல படத்திற்கு அதே ஆடியன்ஸ் வருவதில்லை. ‘அவள்’ மூன்று மொழி படம். அதன் ஷேர் மட்டுமே ஏழு கோடி கிடைத்துள்ளது. 
‘அறம்’ பெரிய ஹிட். ஆனால் பல படங்கள் ஓடவில்லை. 20 படங்கள் ரிலீஸ் ஆனால் அதில் 3 படங்கள் மட்டுமே வசூல் செய்கிறது. சரியாக சொன்னால் 85 சதவீத படங்கள் ஓடவில்லை. 15 சதவீத படங்கள்தான் ஓடி உள்ளன. இந்தப்புள்ளி விவரங்கள் என்ன சொல்கிறது. ஜிஎஸ்டிக்கு பின் சினிமா தொழில் சிரமத்தில்தான் உள்ளது என சொல்கிறது” என்கிறார் தனஞ்செயன்.


Advertisement

Advertisement
[X] Close