Published : 02,Dec 2017 02:38 PM
கடலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களுக்கு தலா ரூ.10 லட்சம்

ஒகி புயலின் போது கடலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுமென கேரள அரசு அறிவித்துள்ளது.
ஓகி புயல் காரணமாக கரை திரும்ப முடியாமல் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 450 கேரள மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. புயல் காரணமாக கடலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுமென கேரள அரசு அறிவித்துள்ளது. இதுவரை புயலால் கடலில் சிக்கி 14 கேரள மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த ஒகி புயல் காரணமாக, குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து அரபிக்கடல் நோக்கி ஒகி புயல் நகர்ந்து சென்றது.
இதனைத்தொடர்ந்து இந்திய கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல்படையின் உதவியுடன் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 450 கேரள மீனவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய படைகள் தயார் நிலையில் உள்ளது என்றும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.