Published : 01,Dec 2017 12:53 PM
9.5 லட்சம் விவசாயிகள் பயீர் காப்பீடு செய்துள்ளனர்: ககன்தீப் சிங்

தமிழகத்தில் 9.5 லட்சம் விவசாயிகள் சம்பா பயிருக்கு காப்பீடு செய்துள்ளதாக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வறட்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பயிர்கள் சேதமடைந்தன. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்றன. அப்போது கடன் தள்ளுபடி மற்றும் பயிர்காப்பீடுகள் குறித்து விவசாயிகள் தரப்பில் பெரும் கோரிக்கைகள் எழுந்தன. இருப்பினும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பயிர்காப்பீடு செய்தவர்களுக்கு மட்டுமே இழப்பீடுகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டில் வடகிழக்குப் பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. கடந்த சில வாரங்களுக்கு முன் கோவையில் விவசாய நிலங்களை ஆய்வு செய்த வேளாண்துறைச் செயலாளர் ககன் தீப் சிங், விவசாயிகள் அனைவரும் பயீர்காப்பீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த சூழலில் 2017-18 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு பிரிமியம் செலுத்த வேண்டிய கடைசிநாள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள ககன்தீப், தமிழகத்தில் 9.5 லட்சம் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் ப்ரீமியம் தொகை செலுத்தும் அனைவருக்கும் காப்பீடு கிடைக்கும் என்பது தவறு என விளக்கம் அளித்துள்ள அவர், மழை புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் மட்டுமே காப்பீட்டு தொகை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.