Published : 01,Dec 2017 09:02 AM

அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது: மதுசூதனன்

More-chances-for-admk-to-win-in-rk-nagar

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு அகில இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தனது வேட்புமனுவினை இன்று தாக்கல் செய்தார். தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் மதுசூதனன் வேட்புமனுவை அளித்தார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சியினர் இருந்தனர்.

வேட்புமனுத் தாக்கலுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், ஆர்.கே.நகரில் வெற்றி பெற டிடிவி தினகரன் கனவு காண்பதாக தெரிவித்தார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆசியுடன் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைத்துள்ளதாக கூறிய அவர், ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் தெரிவித்தார். அதன்பின் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக கொடி எங்களுக்குத்தான் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட பிறகும், தீர்ப்புக்கு எதிராக தினகரன் அதிமுக கொடியை பயன்படுத்தியுள்ளார். மேலும் தினகரன் அதிக ஆட்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்