புயலை சமாளிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறி விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒகி புயல் காரணமாக, குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் பலத்த காற்றோடு கன மழை பெய்தது. இதனால் சாலைகளின் இரு பக்கங்களிலும் ஏராளமான மரங்கள் விழுந்து கிடக்கின்றன. மேலும் சில இடங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் கிடந்த மரங்கள் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரானது. ஆனாலும், கிராம மற்றும் நகர சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்கள் அகற்றப்படாமல் இருக்கின்றன. மரங்கள் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் மின் கம்பங்கள் விழுந்து மின் வினியோகம் தடைபட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “வானிலை ஆராய்ச்சி மையம் முறையாக புயல் எச்சரிக்கையை வெளியிட்டிருந்தாலும், தமிழக அரசு முழு கவனம் செலுத்தவில்லை. புயல் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறிவிட்டது. மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை வரவேற்கத்தக்கது. தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் இறக்குமதி மணல், எம் சேண்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.