Published : 30,Nov 2017 07:16 AM
வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை: மகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என கடிதம்

சென்னையில் மகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை எனக்கூறி வயதான தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சென்னை ஜெ.ஜெ.நகர், காவல்நிலையம் அருகே பாடி புதூரில் வாடகை வீடு ஒன்றில் குப்புசாமி, கோதை தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் தனித்தனியாக தங்கள் குடும்பத்துடன் வசித்துவருகிறார்கள். தனியார் செக்யூரிட்டியாக உள்ள குப்புசாமியும், அவரது மனைவி கோதையும் இன்று தங்கள் வீட்டில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். காலையில் இவர்களின் மூத்த மகன் வினோத் வந்து பார்த்தபோது இருவரும் இறந்தது தெரியவந்தது. ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட தகவலின்பேரில் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. குப்புசாமி 3 பக்கத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்தது.
அந்த கடிதத்தில் சென்னை வாழ்க்கை எந்திர மயமாக இருப்பதாகவும், இருவருக்கும் உடல்நிலை சரியாக இல்லாததால் தங்கள் மகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும் குப்புசாமி எழுதியிருந்தார். தங்கள் இறப்புக்கு யாரும் காரணம் அல்ல என்றும், தாங்கள் சிறுக சேர்த்த பணத்தை வாடகை முன்பணமாக தந்திருப்பதாகவும், அதனை இரு மகன்களும் சரிபாதியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் குப்புசாமி தனது கடைசி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.