
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் கருத்துக்கு முன்னாள் கேப்டன் தோனி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடரை முடித்ததும் டிசம்பர் 27ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு, 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் மூன்று டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இதுபற்றி விராத் கோலி கூறும்போது, இலங்கைக்கு எதிரான தொடர் முடிந்ததுமே தென்னாப்பிரிக்கா செல்கிறோம். அங்குள்ள ஆடுகளங்களில் பந்துகள் அதிக அளவில் மேலெழும்பும். ஆனால், அத்தகைய பந்துவீச்சுகளை எதிர்கொள்ள சரியான பயிற்சி அவசியம். ஆனால் அதற்கான நேரம் கிடைக்கவில்லை. இலங்கை தொடர் முடிந்ததும் இரண்டு நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. எங்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை’ என்று கூறியிருந்தார்.
இதுபற்றி தோனியிடம் கேட்டபோது, ‘கோலி சொன்னது சரிதான். நாங்கள் அதிகமான போட்டிகளில் பங்கேற்கிறோம். அதனால் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க போதுமான பயிற்சி கிடைக்கவில்லை. இருந்தாலும் ஒரு கிரிக்கெட் வீரருக்கு இதுவும் சவால்தான். இந்திய அணியில், வெளிநாடுகளில் விளையாடி அனுபவம் பெற்ற வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எட்டு அல்லது 10 நாட்கள் பயிற்சிக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும். இருந்தாலும் சிறப்பாக செயல்படுவோம்’ என்றார்.