
இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட்டில் முரளி விஜய், புஜாராவை அடுத்து இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியும் சதமடித்தார்.
இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதன் இன்னிங்ஸில் இலங்கை அணி 205 ரன்கள் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. முரளி விஜய்யும், புஜாராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முரளி விஜய், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 10-ஆவது சதத்தையும் புஜாரா 14-வது சதத்தையும் அடித்தனர். வேகமாக ரன்கள் சேர்த்த கேப்டன் விராத் கோலி, தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்தது. புஜாரா 121 ரன்களுடனும், கோலி 54 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மூன்றாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் அபாரமாக விளையாடிய விராத் கோலி சதமடித்தார். இது அவருக்கு 19 டெஸ்ட் சதமாகும். ஒரு நாள் போட்டியையும் சேர்த்து இது அவருக்கு 51-வது சதமாகும். கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியிலும் அவர் சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து புஜாரா 134 ரன்களுடனும் கோலி ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 372 ரன்கள் எடுத்துள்ளது.