Published : 06,Jan 2017 05:04 AM
3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிவு..! தண்ணீர் தட்டுபாடு ஏற்படுமா..?

சென்னையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்திருக்கிறது.
வட கிழக்கு பருவமழை முடிந்துள்ள நிலையில், டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி, நிலத்தடி நீர்மட்டம் சரிந்திருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, சென்னையில் வளசரவாக்கம் மற்றும் ராயபுரத்தில் கடந்த இரு ஆண்டுகளை ஒப்பிடும் போது, 2016ஆம் ஆண்டில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்திருக்கிறது.
குறைந்த அளவாக, அம்பத்தூரில் நிலத்தடி நீர்மட்டம் மிக சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு அரை மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு அது 3.5 மீட்டராக சரிந்திருக்கிறது. கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட கிழக்கு பருவமழை குறைந்த அளவே பெய்திருக்கிறது. இதனிடையே, கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள், வீராணம் குடிநீர் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் குடிநீர் பிரச்னையை சமாளிக்க முடியும் என குடிநீர் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.