அச்சத்தை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டம்

அச்சத்தை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டம்
அச்சத்தை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள், மத்திய அரசு அந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் கைவிடப்பட்ட மீத்தேன் திட்டத்தையே ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மீத்தேன் வாயுக்களின் பொதுப் பெயரே ஹைட்ரோ கார்பன். ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது அதன் வகைகளான மீதேன், ஈதேன், ப்ரோபேன், பியூட்டேன் எனும் அனைத்து வாயுக்களின் கலவைதான். இவற்றை ஷேல் காஸ், டைட் காஸ் என்றும் பிரிக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

நிலத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பது சுற்றுசூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். நிலத்தடி நீர் வளம் குறையும் என்பதும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் குற்றச்சாட்டு. எரிவாயுவை எடுப்பதற்கு செங்குத்தாகவும், படுக்கைவசமாகவும் 1000, 5000 மீட்டர் துளைகள் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் வெளியே உறிஞ்சப்படும் என்கிறார்கள் அவர்கள்.

இதுபோன்ற திட்டங்கள் பொதுவாக கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்படுத்தப்படும். அம்மாதிரி செயல்படுத்தப்படும் போது, நிலத்தடியில் உள்ள நீர் வளம் குறையும் என்ற பிரச்சனை எழுவதில்லை. ஆனால் தற்போது விவசாயப் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதுதான் எதிர்ப்புக்குக் காரணம்.

காவிரி நீர், கானல் நீராகிப் போன நிலையில், டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் வளம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து போகும் என்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதி மலர் வணிகத்திற்குப் பெயர் பெற்றது. இந்தப் பகுதியில் மலர் தொழிற்சாலை கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தினால், மலர் விவசாயம் முற்றிலும் வீணாகும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நோக்கத்துடன் உள்நாட்டில் உள்ள எரிபொருள் வளத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காக இது போன்ற இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டங்கள் கொண்டு வரப்படுவதாக அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது.

ஆக்கப்பூர்வமான திட்டம் என்றாலும் அதன் ஆபத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், விஞ்ஞானத் திட்டங்களை நிறைவேற்றம் போது இயற்கைக்கும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நெடுவாசலை தொடர்ந்து காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com