[X] Close

122 பெரிதா? 111 பெரிதா? டி.டி.வி.தினகரன் கேள்வி

TTV-Dinakaran-said-about-TN-Govt-Majority

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின் போது, அதிமுக அம்மா, அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்று அக்கட்சி இரு அணிகளாக  பிரிந்திருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 23 ம் தேதி இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம். இந்திய அரசியல் வரலாற்றில் முடக்கப்பட்ட சின்னத்தை மீண்டும் கைப்பற்றிய ஒரே கட்சி அதிமுகதான் என்று அதுவரை சொல்லி வந்த அக்கட்சியினர் மீண்டும் ஒரு முறை இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

ஒரு சின்னத்திற்கு இவ்வளவு முக்கியத்துவமா என்றால் ஆம் அதற்கு காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இரட்டை இலை யாரிடம் இருக்கிறதோ அவர்கள் பக்கம்தான் நாங்கள் என்று சொல்லும் அதிமுகவின் கடை நிலைத் தொண்டர்கள் இன்னும் பல்லாயிரக்கணக்கில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுதான் அந்த சின்னத்தைப் பெற அணிகளுக்குள் இத்துனைப் போட்டியை ஏற்படுத்தியது. தற்போது அதிமுகவின் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., அணியினர் இரட்டை இலையைப் பெற்றிருக்கும் நிலையில், இரட்டை இலையின் வரலாற்றை நாம் சற்றே திரும்பிப் பார்க்கலாம்.

தன் மரணத்திற்குப் பிறகும் தன் உடல் மீது தி.மு.க.வின் கொடியே போர்த்தப் பட வேண்டும் என்று சொல்லி வந்த எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் இடையே அண்ணாவின் மரணத்திற்குப் பிறகு கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கின. அதன் உச்சகட்டமாய் 1972 அக்டோபர் 8 ம்தேதி திருக்கழுங்குன்றம் மற்றும் ராயப்பேட்டை ஆகிய இரண்டு பொதுக்கூட்டங்களில் பேசிய எம்.ஜி.ஆர் தி.மு.க.வில் பதவிகளில் இருப்பவர்கள் தங்களின் சொத்துக் கணக்கைக் கட்சிக்குக் காட்ட  வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசினார். 


Advertisement

எம்.ஜி.ஆரின் இந்த பேச்சு கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இப்போது போலவே அப்போதும் செயற்குழு, பொதுக்குழு என்று பரபரப்பான காட்சிகள் அரங்கேறுகின்றன. இறுதியில் 1972 அக்டோபர் 14 ம் தேதி எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்க முடிவு செய்த நிலையில், ஏற்கனவே அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியைப் பதிவு செய்திருப்பதை அறிந்து அதில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.

இந்நிலையில் அதிமுக தனது முதல் தேர்தலைச் சந்தித்தது. 1973ம் ஆண்டு மே20ம் தேதி திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கட்சி ஆரம்பித்து ஓராண்டிற்குள்ளாகவே நடைபெற்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்கிறார் எம்.ஜி.ஆர். அதிமுகவின் சார்பில் மாயத்தேவர் வேட்பாளராக களம் இறக்கப்படுகிறார். அதிமுகவின் பலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் தேர்தலாக அன்று இது பார்க்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்த சின்னங்களில் இருந்து இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்கிறார் வேட்பாளர் மாயத்தேவர்.

அந்த தேர்தலில் அதிமுகவின் சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட,  தி.மு.க. மூன்றாம் இடத்திற்குச் செல்கிறது. தொடர்ந்து 1977ல் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னமே ஒதுக்கப்படுகிறது. இந்த இரண்டு தேர்தல்களிலுமே அதிமுக அமோக வெற்றி பெறுகிறது.

எம்.ஜி.ஆர்.முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். இவ்வாறு அடுத்தடுத்து வெற்றிகளை அக்கட்சி இரட்டை இலை சின்னத்திலேயே சந்தித்தது. தமிழகத்தின் கிராமங்கள் தோறும் இரட்டை இலை சின்னம் கொண்டு போய் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர். உடல் நலக்குறைவால் 1987 டிசம்பர் 24 அதிகாலை மரணமடைகிறார்.  

கட்சி இரண்டு பிரிவுகளாக மாறுகிறது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அவர்களின் தலைமையில் ஓர் அணியாகவும், ஜெயலலிதா தலைமையில் ஓர் அணியாகவும் கட்சி செயல்படத் தொடங்குகிறது.

முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த ஜானகி அவர்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லை எனக் கூறி ஆட்சி கலைக்கப்படுகிறது.

இதையடுத்து 1989 ஜனவரி 21 தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஜெயலலிதா தலைமையில் அதிமுகவின் ஜெ.அணியும் ஜானகி தலைமையில் அதிமுகவின் ஜா.அணியும் போட்டியிட்டன. ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு இரட்டைப்புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா அணி  27 இடங்களைக் கைப்பற்றியது. ஜானகி அணியில் சேரன்மகாதேவியில் போட்டியிட்ட பி.ஹெச்.பாண்டியன் மட்டுமே வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா எதிர்கட்சித்  தலைவரானார். அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான முயற்சிகளை சிலர் மேற்கொண்டனர். தேர்தல் தோல்வி உள்ளிட்ட காரணங்களால் ஜானகியும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். 1989 பிப்ரவரி 10ம் தேதி அதிமுகவின் இரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக இணைந்தன. இரட்டை இலை சின்னம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள்  திரும்பப் பெறப்படுகின்றன. இதையடுத்து ஒருங்கிணைந்த அதிமுகவிற்கு மீண்டும் இரட்டை இலை கிடைக்கிறது.

இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்த பிறகு அதிமுக சந்தித்த முதல் மக்களவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிட்ட 11 இடங்களிலும் வெற்றி பெற்றது அதிமுக. இரட்டை இலை என்பது அதிமுகவிற்கு எத்துனை முக்கியமானது என்பதை உணர்த்தியது இத்தேர்தல். இதையடுத்து 1991 மே 26 தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது 158 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. முதலமைச்சர் ஆனார் ஜெயலலிதா. 
இந்தத் தேர்தலிலும் அதிமுகவின் அமோக வெற்றிக்கு பிரதான காரணிகளுள் ஒன்றாக இரட்டை இலை சின்னம் பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்து விட்ட நிலையில், மீண்டும் அக்கட்சிக்குள் பல்வேறு பிரிவுகள், சேர்க்கைகள் என்று நீடித்து வந்த நிலையில் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலின் போது முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம், டிசம்பர் 31 ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் மீண்டும் துளிர்த்திருக்கிறது. 

எண்ணிக்கையின் அடிப்படையிலேயே இரட்டை இலை ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 111 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு முதல்வர் அணிக்கே என்று கூறியுள்ள தேர்தல் ஆணையத்தை நோக்கி, அன்று 122 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கு இருந்தபோது ஏன் இரட்டை இலையை முடக்கினீர்கள்? என்று எதிர் கேள்வி கேட்கிறார் டி.டி.வி.தினகரன். 
கூடுதலாக 111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுதான் இந்த அரசுக்கு இருக்கிறது என்று தேர்தல் ஆணையமே தெரிவித்துள்ள நிலையில் இந்த அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது என்பதையே இது காட்டுகிறது என்பது டி.டி.வி தரப்பின் வாதம்.

இரட்டை இலை முடக்கப்பட்டபோது டிடிவி தினகரனும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஓரணியிலும், ஓ.பன்னீர் செல்வம் இவர்களுக்கு எதிரணியிலும் இருந்தனர். இப்போது மீண்டும் இரட்டை இலை கிடைத்துள்ளபோது, ஈ.பி.எஸ்.சும்., ஓ.பி.எஸ்.சும், ஓரணியில் உள்ளனர். டி.டி.வி.தினகரன் இவர்களுக்கு எதிரணியில் இருக்கிறார். மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வாக்கியத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது அரசியல் களம்..
 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close