
எழும்பூரில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்பு காவலர், துரிதமாக செயல்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றினார்.
தென்காசிக்கு செல்லும் பொதிகை விரைவு ரயில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு புறப்பட்டது. அப்போது காலதாமதாக வந்த பயணி ஒருவர், ஓடும் ரயிலில் அவசர அவசரமாக ஏற முயன்றார். ரயில் படிக்கட்டில் அந்த பயணி காலை வைத்தபோது திடீரென தவறி, ரயில் பெட்டிக்கும், நடைமேடைக்கும் இடையில் அவர் விழுந்தார். இதனை பார்த்த ரயில்வே பாதுகாப்பு காவலர் பிரமோத் சிங், துரிதமாக செயல்பட்டு அந்த பயணியை காப்பாற்றினார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்திருக்க வேண்டிய பயணியை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்படை காவலர் பிரமோத் சிங்கை பயணிகள் வெகுவாக பாராட்டினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில் பொதுமக்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.