[X] Close

ஆய்வுப் பணிகள் தொடரும்: ஆளுநர் திட்டவட்டம்

Nothing-illegal-inmeetings--Governor

ஆய்வுப் பணிகள் தொடரும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். பெரிதோ, சிறிதோ தனது முடிவுகள் எதிலும் அரசியல் உள்நோக்கம் இல்லை என்றும் ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.


Advertisement

கோவையில் சில நாட்களுக்கு முன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இது ஒரு அரசியல் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்த நிலையில், ஆளுரின் முதன்மை செயலாளர் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், சிலர் ஆளுநரின் நடவடிக்கையை வரவேற்றபோதும், சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டளையை ஏற்றே ஆளுநர் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று ஆளுநர் கூறியுள்ளார். இத்தகைய குற்றச்சாட்டு முழுமையாகத் தவறு என்றும், கற்பனையின் அடிப்படையில் புனையப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம், அதன் வழிமுறைகளைப் பின்பற்றியே ஆளுநர் செயல்பட்டதாகவும் ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.


Advertisement

பெரிதோ, சிறிதோ ஆளுநரின் முடிவுகள் எதிலும் அரசியல் உள்நோக்கம் இல்லை என்றும், சட்டத்தின் அடிப்படையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார். அரசின் வளர்ச்சிப் பணிகளை ஆதரிக்கும் நோக்கிலும், அதற்கு கூடுதல் நிதியைப் பெற்றுத் தரும் நோக்கிலுமே ஆளுநர் செயல்பட்டதாக கூறியுள்ளார். ஆய்வு குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்ததாகவும், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ததில், சட்ட மற்றும் அரசியல் சாசன மீறல் ஏதுமில்லை என்றும் ஆளுநரின் செயலாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசுக்கு ஒத்துழைக்கவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதிகாரிகளை கட்டாயப்படுத்தியோ, வற்புறுத்தியோ கூட்டத்திற்கு அழைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம்‌ ஆளுநராக இருந்தபோதும் அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்களிலும் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது போன்ற ஆய்வுகளில் ஆளுநர் ஒருபோதும் சட்டத்தை மீறியது கிடையாது. இதுபோன்ற கூட்டங்கள், ஆய்வுகள் மாநில வளர்ச்சித் திட்டங்கள், அடித்தட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து தெரிந்து கொள்ள உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பிரச்னைகளை இந்திய அரசுக்கு தெரியப்படுத்தி, அதற்குத் தேவையான நிதியை பெற ஆய்வுகள் உதவுகின்றன. மாநிலத்தின் நலன்களுக்காக அர்ப்பணித்துக் கொள்வேன் என்று பதவியேற்பின்போது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு ஏற்ப, ஆய்வு பணிகள் தொடரும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். ஆளுநரின் நடவடிக்கைகளை அமைச்சர்கள் வரவேற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஆளுநரின் செயலாளர், ஆளுநர் ஆய்வு நடத்த அரசியலமைப்புச்சட்டத்தில் தடையேதும் இல்லை என்றும் கூறியுள்ளார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close