Published : 20,Nov 2017 05:40 PM

திருவாரூர் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு: மக்கள் எதிர்ப்பு

new-ongc-well-in-thiruvarur-village-people-against

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் விவசாய நிலத்தின் நடுவில் ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய எண்ணெய் கிணறு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இங்கு எண்ணெய் கிணறு அமைத்தால் 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிந்துவிடும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் கமலாபுரம், எருக்காட்டூர், கொரடாச்சேரி, வெள்ளக்குடி, அடியக்கமங்கலம், களப்பால் போன்ற 100க்கும் மேற்பட்ட இடங்களில் எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக நன்னிலத்தை அடுத்த தென்னஞ்சேரி கிராமத்தில் விவசாய நிலத்தின் நடுவில் புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு நன்னிலம், தென்னஞ்சேரி, மாப்பிள்ளைக்குப்பம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட சிறுகிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஓன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டியதாக மாப்பிள்ளைகுப்பத்தை சேர்ந்த 9 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் 4 பேர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இதையடுத்து ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கனரக வாகனங்களுக்கு பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது.

நன்னிலம் அருகே எண்ணெய் கிணறு அமைப்பது குறித்து ஓஎன்ஜிசி அதிகாரிகளிடம் கேட்டபோது, தென்னஞ்சேரி பகுதியில் கச்சாஎண்ணை உள்ளதா என்ற முதற்கட்ட ஆய்வுப்பணி மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளனர். மீத்தேன் திட்டமோ, ஹைட்ரோகார்பன் திட்டமோ செயல்படுத்தப்படவில்லை என்றும் மக்களும், விவசாயிகளும் அச்சப்பட வேண்டாம் என்றும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்