
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் செல்போனில் சீட்டு விளையாடிய மின்வாரிய அதிகாரிக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டம் ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகளும், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்றிருந்த திண்டிவனத்தை சேர்ந்த மின்வாரிய அதிகாரி ஒருவர், கூட்டத்தில் கவனம் செலுத்தாமல் தனது கைபேசியில் நீண்ட நேரம் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். எதைப் பற்றியும் கவலைபடாமல் சீட்டு ஆடுவதிலேயே அவர் முழுக்கவனத்தையும் செலுத்தினார்.
விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து தீர்க்க வேண்டிய அரசு அதிகாரி விவசாயிகளை அலட்சியப்படுத்தும் வகையில் செல்போனில் சீட்டாடியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.