Published : 17,Nov 2017 11:06 AM
எனது மனைவிக்கு ஓட்டுபோடாவிட்டால்... பாஜக பிரமுகர் எச்சரிக்கை பிரச்சாரம்

உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஒருவர், தனது மனைவிக்கு ஓட்டுபோடாவிட்டால் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடும் என முஸ்லீம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் ஸ்ரீவாஸ்தவா. இவரது மனைவி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்காக ரஞ்சித் குமார் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையில் பேசிய அவர், எனது மனைவிக்கு வாக்களிக்காவிட்டால் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடும் என முஸ்லிம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அவர் மேலும் பேசும்போது, "மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சிதான் நடைபெறுகிறது. எனது மனைவி உட்பட பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களித்தால்தான் உங்களுக்கான வேலை நடக்கும். சமாஜ்வாதி கட்சி உங்களுக்கு எந்தவித உதவியும் செய்யாது. நான் உங்கள் முன் வாக்குதான் கேட்கிறேன். பிச்சை கேட்கவில்லை. எங்களுக்கு வாக்களித்தால் சந்தோஷமாக இருப்பீர்கள். இல்லையென்றால் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடும்" என முஸ்லீம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதனிடையே ரஞ்சித்குமார் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவிக்கும் போது, முதலமைச்சர் ஆதித்யநாத் அமைச்சரவையில் அங்கும் வகிக்கும் இரண்டு அமைச்சர்கள் அந்த மேடையில் இருந்துள்ளனர். அவர்கள் ரஞ்சித்குமார் பேச்சுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.