
விருதுநகர் அருகே நிலத்தடி நீருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் விதிமுறையை மீறி செயல்படும் மணல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டி அருகே அச்சங்குளம் கிராமத்தில் குண்டாற்றின் கரையோரங்களில் பாண்டுரங்கன் என்பவர் சவுடு மண் அள்ளுவதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று கொண்டு விதிமுறையை மீறி மணல் அள்ளுவதாக கூறப்படுகிறது. அரசு சவுடு மண் அள்ளுவதற்கு அனுமதித்துள்ள 6 அடி அளவைவிட 25 முதல் 30 அடி ஆழத்திற்கு மணல் அள்ளுவதாகவும் இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் நிலத்தடி நீருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் மணல் குவாரியை மூடக் கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனுக்கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து முறையிட்டும் மணல் குவாரியை மூட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காத நிலையில் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் கிராம மக்கள் ஒன்றிணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்