Published : 10,Nov 2017 04:23 PM
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: முதலமைச்சர் நாளை ஆலோசனை

தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 12ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் ஆட்சியர்கள் பங்கேற்கிறார்கள். மேலும் சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலர்கள் மற்றும் மழைக்காக நியமிக்கப்பட்ட ஏழு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
இவர்களுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள், 3 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தற்போது வரையிலான மழைவெள்ள பாதிப்பு நிவாரணப்பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என்று தெரிகிறது.