முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன: வருமானவரித்துறை

முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன: வருமானவரித்துறை
முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன: வருமானவரித்துறை

சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவகங்களில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சசிகலா, ‌டிடிவி தினகரன் குடும்பத்தினருக்கு சொந்தமான 187 இடங்களில் வருமானவரித் துறையினர் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையில் ஈடுபட வந்த வருமான வரித்துறையினர், சோதனை பற்றிய தகவல் வெளியே கசியாமல் இருப்பதற்காக வாடகைக்கார்களையே பயன்படுத்தினர். வாடகைக்கார்களில் ‘ஸ்ரீனி வெட்ஸ் மகி’ என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. பார்ப்பவர்களுக்கு திருமண விழாவுக்காக செல்பவர்கள் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. பெரும்பாலான இடங்களில் காலை 6 மணி முதலும், சில இடங்களில் 7 மணி முதலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவருகிறார்கள். 6 வருமான வரித்துறை ஆணையர்கள் தலைமையில், 1800 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா டிவி சிஇஓ விவேக் வீட்டில் குடிநீர் தொட்டியில் எதுவும் இருக்கிறதா எ‌ன சோதனை நடத்தப்பட்டது. பரபரப்பாக சோதனை ‌நடந்து கொண்டிருந்தபோது டிடிவி தினகரன் குடும்பத்தினர் கோ பூஜையில் ஈடுபட்டனர். மாட்டிற்கு பூஜைகள் செய்த தினகரன் அதற்கு அகத்திக்கீரை அளித்தார். போயஸ் கார்டன் அருகில் செயல்படாத நிலையில் உள்ள பழைய ஜெயா டிவி அலுவலகத்திற்கும் வருமானவரித்துறையினர் சென்றனர். ஆனால் துர்நாற்றம் வீசியதால் வருமானவரித்துறை அதிகாரிகள் உள்ளே செல்ல தயங்கினர். இருப்பினும் பின்னர் உள்ளே சென்று சோதனையை மேற்கொண்டனர். 

இந்நிலையில் காலை முதல் நடத்தப்பட்ட சோதனையில் சென்னை உள்ளிட்ட இடங்களில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com