Published : 09,Nov 2017 01:19 PM
வருமான வரித்துறை சோதனைக்கான காரணங்கள் இவைதானா ?

பிரிக்க முடியாதது என்னவோ...என்று திருவிளையாடல் தருமியின் தொனியில் கேட்டால் தற்போதைய நிலையில், வருமான வரித்துறை சோதனைகளையும் அரசியல் கணக்குகளையும் சொல்லலாம்..
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தமிழகம் அடிக்கடி சந்தித்த காட்சிகளுள் ஒன்று இந்த வருமான வரிச்சோதனை. சசிகலாவோடு முரண்பட்டு ஓ.பி.எஸ். தன் எதிர்ப்பை பதிவு செய்த பிறகு தமிழகத்தில் அடுத்தடுத்து ஏராளமான சோதனைகள் இவ்வாறு நடைபெற்றுள்ளன. குறிப்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்குள்ளேயே துணை ராணுவப் படையின் உதவியோடு சோதனை நடைபெற்றது. அன்றைய தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் தன்னிடம் இருந்து எதையும் கைப்பற்றவில்லை என்றும் ஜெயலலிதா இருந்திருந்தால் இவ்வாறெல்லாம் நடந்திருக்காது என்றும் தெரிவித்தார்.
அதன் பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்திருந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 85 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பண விநியோகம் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றியதாகத் தெரிவித்த வருமான வரித்துறை அதை ஊடகங்களுக்கும் கசிய விட்டது .அதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயரும் இடம் பெற்றிருந்தது. அந்தத் தேர்தலில் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சரத்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இதன் நீட்சியாக, இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரனை கைது செய்தது டெல்லி காவல்துறை. திகார் சிறையில் இருந்த அவரை பிணையில் விடுவித்தது நீதிமன்றம். இந்த வழக்கில் இன்னமும் அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் கவனிக்கக் கூடியது.
மேற்கண்ட அனைத்து சோதனைகளுமே அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைகள் என்றே டிடிவி தரப்பினரால் விமர்சிக்கப்படுகின்றன. டிடிவி தரப்பினரும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் ஓரணியில் இருந்த வரை நடத்தப்பட்ட சோதனைகளை ஈ.பி.எஸ்.ஆதரவாளர்களும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் பார்த்தார்கள். இத்தகைய சோதனைகள் இங்கு மட்டும் நடத்தப்படவில்லை.
குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பேரம் பேசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த போது, அவர்கள் அனைவரும் பெங்களூரு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார் கர்நாடக அமைச்சர் சிவக்குமார். அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஐந்து கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இவ்வாறு நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனைகளுக்குப் பின்னால் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்று மத்திய ஆளும் பா.ஜ.க.தரப்பில் தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே, மெர்சல் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த விஷால் வீட்டில் சோதனை நடைபெற்றது. இம்முறை டிடிஎஸ். தொடர்பாக சோதனை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் விஷாலின் ஆடிட்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இது வரை நடைபெற்ற சோதனைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் என்ன ? என்ற கேள்வியை முன் வைக்கிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் புதிய நோட்டுகள் கோடிக்கணக்கில் சேகர் ரெட்டியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு சுமார் ஒரு வருடத்தை நெருங்கும் நிலையிலும் அவர் மீது இதுவரை குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை என்பது நினைவு கூறப்பட வேண்டியது.
தவிர்க்க முடியாமல் இந்த இடத்தில் இன்னொரு விஷயமும் நம் நினைவுக்கு வருகிறது. அது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அண்ணா அறிவாலயத்தில் நடத்தப்பட்ட சிபிஐ சோதனை. அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி பேச்சில் திமுக ஈடுபட்டிருந்த அதே சமயம் அதன் மேலே கலைஞர் தொலைக்காட்சியில் சிபிஐ சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
சமீபத்தில் இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டது 'பாரடைஸ் பேப்பர்' . இதில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த்சின்ஹா, தொழிலதிபர் விஜய் மல்லையா, சச்சின் பைலட், கார்த்தி சிதம்பரம், ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் நிதியமைச்சர்.
தமிழகத்தில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைகளைப் போலவே வேகமாக பாரடைஸ் பேப்பர் விவகாரம் குறித்தும் விசாரணை நடைபெறுமா என்ற கேள்விக்கு, இதை வாசிக்கும் உங்களின் மனதில் எழும் பதிலே சரியான பதிலாக இருக்கும்.
அதே போல், தமிழகத்தில் நடக்கும் வருமான வரிச் சோதனைகளில் அரசியல் நோக்கமே இல்லையா என்ற கேள்விக்கும், உங்களின் மனதில் எழும் பதிலே சரியானதாகத்தான் இருக்கும்.
அதே சமயம், வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளனாவர்கள் அனைவரும், எந்த விதமான பொருளாதாரக் குற்றங்களிலும் ஈடுபட்டிருக்கவே மாட்டார்கள் என்று சொல்ல முடியுமா என்று மூன்றாவதாக ஒரு கேள்வியை முன் வைத்தால் அதற்கான சரியான பதிலும் உங்கள் மனதில் எழும் பதிலே.
மொத்தத்தில் ஓரிரு நாட்கள் தாமதமாக மின் கட்டணம் செலுத்தும் சாமானியரின் வீட்டில் மின்சாரத்தை துண்டிப்பதில் வேகம் காட்டும் நம் நிர்வாக அமைப்பு சில, பல லட்சம் கோடிகளில் நடைபெறும் பொருளாதாரக் குற்றங்களைத் தண்டிப்பதில் அதே வேகத்தைக் காட்டிட வேண்டும் என்பதும், அதை விருப்பு வெறுப்புகளைக் கடந்து காட்டிட வேண்டும் என்பதுவுமே சாமானியர்களின் விருப்பம்.
இப்போது தலைப்பில் உள்ள கேள்விக்கான விடை...
வருமான வரித்துறை சோதனைக்கான காரணங்கள் இவைதானா என்ற கேள்விக்கு காரணங்கள் இவைகள்தான் என்று உடனடியாக உங்கள் மனதில் எவையெல்லாம் தோன்றுகிறதோ அவைகளே உண்மையான காரணங்கள்...