ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் காலமானார்

ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் காலமானார்
ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் காலமானார்

சென்னையில் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் காலமானார். 

பாலு மகேந்திராவிடம் உதவி ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய ப்ரியன், தெனாலியில் கமல், தொடங்கி 'வரலாறு' படத்தில் அஜித், 'வேலாயுதம்' படத்தில் விஜய், என்று முன்னணி நட்சத்திர கதாநாயகர்கள் உடன் பணியாற்றினார். அதேபோல், விக்ரம், சூர்யா, விஷால், பிரசாந்த், சிம்பு, பரத் என்று பல முன்னணி நாயகர்களுடன் அவர் பணிபுரிந்திருக்கிறார். மொத்தம் 25-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக ப்ரியன் பணியாற்றியுள்ளார்.  

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ப்ரியன், 1982-ல் வெளியான மூன்றாம் பிறை படத்தில்தான் உதவி ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பாலுமகேந்திராவுடன் ஓலங்கள்(1982), சத்மா(1983), யாத்ரா(1984) ஆகிய படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக ப்ரியன் பணியாற்றினார். மணிரத்னம் இயக்கிய பகல் நிலவு, நாயகன் ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர்கள் குழுவில் பணியாற்றினார். 

1995-ம் ஆண்டு வெளியான தொட்டா சிணுங்கி படத்தில்தான் ப்ரியன் உதவி ஒளிப்பதிவாளர் நிலையில் இருந்து ஒளிப்பதிவாளராக உயர்ந்தார். பின்னர் சேரன் இயக்கத்தில் வெளிவந்த பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். ஹரி இயக்கத்தில் வெளியான 13 படங்களில் ப்ரியன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 

சிங்கம் 3 படத்திற்கு பிறகு ஹரி இயக்கும் சாமி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஒளிப்பதிவு பணி செய்து வந்தார். இந்த நிலையில், ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com