[X] Close

பணமதிப்பு நீக்கம்: சர்ஜிகல் ஸ்டிரைக்கா? சர்தார்ஜி ஜோக்கா?

Demonetisation-Reactions-positive-or-negative

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மன்மோகன்சிங்கின் திட்டங்களை எல்லாம் சர்தார்ஜி ஜோக்குகளோடு ஒப்பிட்டனர் பாஜக தலைவர்கள். உண்மையில் பணமதிப்பு நீக்க அறிவிப்பு எந்த சர்தார்ஜி ஜோக்குக்கும் சளைத்ததல்ல என்பதே உண்மை. உச்சபட்ச பில்டப்களோடு 2016 செப்டம்பரில் துவங்கிய பணமதிப்பு நீக்க நடவடிக்கை, பின்னர் ஒவ்வொரு கேள்வியிலும் அடிபட்டு இப்போது குற்றுயிரும் குலையுயிருமாக நிற்கிறது.

இந்தியாவை ஆண்ட மொகலாய அரசர் முகமது பின் துக்ளக் தனது ஆட்சியில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களுக்கு பதிலாக செம்பிலும் தோலிலும் புதிய நாணயங்களை அறிமுகப்படுத்தியபோது அவர் அதனை மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தமாகவே பார்த்தார், அந்த நடவடிக்கையால் நாணய தயாரிப்பு செலவுகள் பெருமளவில் மிச்சம் என நினைத்தார். ஆனால் போலி நாணயங்களைத் தயாரிப்பவர்கள் குடங்களில் இருந்தும், செறுப்புகளில் இருந்தும் நாணயங்களைத் தயாரிக்க, இன்றும் நாம் துக்ளக்கை அந்தத் தோல்வியின் நினைவாகத்தான் கேலி செய்கிறோம்.

துக்ளக்கின் அந்தத் திட்டத்திற்குப் பிறகு இந்திய வரலாற்றில் மாபெரும் தோல்வியை அடைந்த பொருளாதாரத் திட்டம் இந்த பணமதிப்பு நீக்கம்தான் என்பது கசப்பான உண்மை. கசப்பு மருந்துகளை ஏற்க வேண்டியது மக்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும்கூட சிலசமயம் கடமைதான், நோய் தீர வேண்டுமே?.


Advertisement

பணமதிப்பு நீக்கத்தின் தோல்விப் பக்கங்களை அசைபோட வேண்டிய, அதில் இருந்து பாடம் கற்க வேண்டிய நாள் இன்று. பணமதிப்பு நீக்கத்தின் தோல்வி அது அறிவிக்கப்பட்ட நவம்பர் 8, 2016க்கு முன்பே துவங்கிய ஒன்று….

பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட அன்றுதான் மோடி புதிய 2000 ரூபாய் பணத்தாள்களைப் பற்றியும் மக்களுக்கு அறிவித்தார், இந்த அறிவிப்புகள் அனைத்தும் மிக ரகசியமானவை என்று கூறப்பட்டன. இவற்றை எதிரி நாட்டு ராணுவத்தின் மீது நடத்தப்படும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் எனப்படும் துல்லியத் தாக்குதலோடு  மோடி ஒப்பிட்டார்.

அதற்கு முந்தைய செப்டம்பர் 29ஆம் தேதியன்றுதான் இந்தியா பாகிஸ்தான் மீது தனது முதல் சர்ஜிகல் ஸ்டிரைக்கை நடத்தி இருந்தது. இதில் பாகிஸ்தானின் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் கூறியது. இது இந்தியா முழுதும் மோடி அரசின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்புதான் பணமதிப்பு நீக்கத்தின் போது மக்கள் அரசுக்கு ஒத்துழைக்கக் காரணமாக இருந்தது. சர்ஜிகல் ஸ்டிரைக்கா பணமதிப்பு நீக்கம்?

பஞ்சாபின் பாஜக தலைவர்களில் ஒருவரான சஞ்சீவ் கம்போஜ் நவம்பர் 6ஆம் தேதியே தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய 2000 ரூபாயின் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். மேற்கு வங்கத்தில் நவம்பர் 7 ஆம் தேதி பாஜகவின் வங்கிக் கணக்கில் திடீரென ஒரு கோடி வரை வரவு வைக்கப்பட்டதை மேற்கு வங்க கம்பூனிஸ்டுகள் கேள்விகளுக்கு உள்ளாக்கினார்கள். இந்தி பத்திரிகையான ’தைனிக் ஜார்கன்’னில் செய்தியாளர் பிரஜேஷ் துபே புதிய 2000 ரூபாய் பணத்தாள் குறித்த தகவலை 2016, அக்டோபர் 27ல் வெளியிட்டு இருந்தார். அதாவது மோடி சொல்வதற்கு 11 நாட்கள் முன்பு.

இவர்களைப் போல இந்தியாவில் பலருக்கும் பணமதிப்பு நீக்கம் பற்றி முன்னதாகவே தெரிந்திருந்ததாக கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன, அவை அனைத்தும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் அல்ல என்பது கவனிக்கப்பட வேண்டியது.

’2016 ஆம் ஆண்டில் ஒவ்வொரு காலாண்டிலும் வங்கிகள் வரவு வைத்த பணத்தைப் பார்த்தால் (வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்குகளில் போட்டு வைக்கும் பணம்) பணமதிப்பு நீக்கம் உண்மையிலேயே ரகசியமானதா? – எனத் தெரியும்’ என்றார். அப்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். ஏனெனில் பணமதிப்பு நீக்கம் கொண்டுவரப்படும் முன்பு, அதற்கு முந்தைய இரண்டு காலாண்டுகளில் முறையே 2.5 லட்சம் கோடி மற்றும் 1.5 லட்சம் கோடிகளுக்கு வங்கிகளில் வரவுகள் இருந்தன. ஒரு லட்சம் கோடி வரைக்கும் காலாண்டில் வரவுகள் கூடவோ குறையவோ செய்யும் என்பது இயல்பானது.

ஆனால் பணமதிப்பு நீக்கம் நடைபெறுவதற்கு முந்தைய ஜூலை  - செப்டம்பர் காலாண்டில் மட்டும் 6.6 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் வரவு வைக்கப்பட்டு இருந்தது. அதாவது முந்தைய காலாண்டை விடவும் 5.1 லட்சம் கோடிகள் அதிகமான வரவு. இது போன்ற ஒரு வித்தியாசம் இதற்கு முன்பு ஒருபோதும் காணப்பட்டது இல்லை. வங்கிகளில் பணம் இருப்பதுதான் பாதுகாப்பானது என்பதை முன்னமே பெரும் பணம் கொண்ட சிலர் அறிந்திருந்ததையே இது காட்டியது. ரிலையன்ஸ் போன்ற பல நிறுவனங்கள் தங்கள் பெரிய கனவுத் திட்டங்களை பணமதிப்பு நீக்கத்தின் முன்பாகவே நிறைவேற்றியது வெறும் தற்செயல் மட்டும்தானா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

பணமதிப்பு நீக்கத்தின் நாட்களில் ’ரூ.500, 1000 செல்லாது என்ற அரசின் அறிவிப்பால் ஏழைகள் நிம்மதியாக உறங்குகிறார்கள்; பணக்காரர்கள் தூக்க மாத்திரைக்காக அலைந்துகொண்டிருக்கின்றனர். இதுதான் வாக்குகளின் வலிமை’ – என்று பேசினார் மோடி. ஆனால் 2016ல் இந்தியக் கோடீஸ்வரர்களின் சொத்துகள் குறைவதற்கு மாறாக உயர்ந்தே இருப்பதைத்தான் சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

பணமதிப்பு நீக்கத்தினால் இந்திய மக்களில் பெரும்பாலானோர் பெரும் பண இழப்புகளைச் சந்தித்த 2016ல் இங்குள்ள 100 பெரும் கோடீஸ்வரர்களின் சொத்துகளின் மதிப்பு மேலும் 26% உயர்ந்தது. அதாவது அந்த ஆண்டில் 31லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளை 100 பேர் பெற்றனர். இதில் யோகா குரு பாபா ராம்தேவுக்கு நெருக்கமான பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் ஆச்சார்யா பாலகிருஷ்ணா கோடீஸ்வரர்கள் பட்டியலில் 48-வது இடத்திலிருந்து 19-வது இடத்துக்கு ஒரே ஆண்டில் முன்னேறியதுதான் மிகப்பெரிய வளர்ச்சியாக இருந்தது.

பணமதிப்பிழப்பு எந்த இலக்கைக் கூறித் தொடங்கப்பட்டதோ, அதற்கு நேர் எதிரான இலக்கை மிகவும் வெற்றிகரமாகவே தாக்கி உள்ளது. நாட்டில் இருந்த அனைத்து கறுப்புப் பணத்தையும் வெளுத்துக் கொடுத்ததுதான் பணமதிப்பு நீக்கம் செய்த உண்மையான பணி. அந்த வகையில் இது சொந்தநாட்டு மக்களின் மீது நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக், கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி அதை வெளுத்துக் கொடுத்த சர்தார்ஜி ஜோக்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close