Published : 08,Nov 2017 03:28 PM
படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை: யுனெஸ்கோவுக்கு முதலமைச்சர் நன்றி

சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்த யுனெஸ்கோவுக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
யுனெஸ்கோ அமைப்பு கைவினைப் பொருள்கள், நகர வடிவமைப்பு, திரைப்படம், உணவு முறை, இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை என 7 பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு செய்யும் நகரங்களை ‘படைப்பாக்க நகரங்கள்’ (Creative Cities) என்று பட்டியலிட்டு சிறப்புச் செய்து வருகின்றது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் உள்ள 72 நாடுகளைச் சேர்ந்த 180 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அந்த வரிசையில் பாரம்பரிய இசைக்கு சென்னை அளித்து வரும் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையையும் யுனெஸ்கோ அமைப்பு சேர்த்தது.
இந்நிலையில் படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னையைச் சேர்த்த யுனெஸ்கோவுக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை வாழ் மக்கள் மற்றும் இசைத்துறை கலைஞர்களுக்கும் வாழ்த்து மற்றும் பாராட்டுக்கள். இசைத் துறையில் சென்னையின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் யுனெஸ்கோ அமைப்பு பாராட்டி அங்கீகரித்திருப்பது நமக்கெல்லாம் பெருமை” என்று கூறியுள்ளார். யுனஸ்கோ அறிவித்துள்ள பட்டியலில், சென்னை நகரம் இடம் பிடித்துள்ளதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமருக்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.