
கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் காங்கிரஸூக்கு எந்தவித அக்கறையும் இல்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து சென்னை தியாகராயநகரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக தெரிவித்தார். கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அரசு திட்டங்களிலிருந்து போலியான நபர்கள் ஆதாயம் பெறுவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணம் முழுவதும் ஏறக்குறைய வங்கிக்கு திரும்பியுள்ள நிலையில், அவை அனைத்தும் வெள்ளைப்பணம் இல்லை என்று தெரிவித்தார். கறுப்புப்பணத்தை வெள்ளையாக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ரொக்கத்தின் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியே இந்தப் பண மதிப்பு நீக்க நடவடிக்கை.மேலும் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.