கரும்பு விவசாயிகளுக்காக தமிழ் வழியில் மொபைல் ஆப் அறிமுகம்
விவசாயிகளுக்கு உதவும் விதமாக கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், தமிழ் வழியில் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள் என ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் வீரகேரளம் பகுதியில் மத்திய அரசின் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் மூலம், நாடு முழுவதும் கரும்பு உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டிஜிட்டல் முறை மூலம் கரும்பு விவசாயிகளின் சந்தேகங்களுக்கு தீர்வு காண புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் 'கேன் அட்வைசர்' (Cane Adviser) என டைப் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் கரும்பு உற்பத்தி குறித்த அனைத்து ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எளிமையாக பயன்படுத்தும் விதமாக தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதால், தங்களது சந்தேகங்களை விவசாயிகளால் விரைவில் தீர்த்துக் கொள்ள முடியும். செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில், விவசாயிகள் அனைவரும் அதில் இணைந்து பயன்பெற வேண்டும் என கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.