
முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு திருச்சியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். 5 ஆண்டுகள் ஆகியும் கொலையாளிகள் குறித்த எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.
ஒவ்வொரு முறை விசாரணை நடைபெறும் போதும் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம், விரைவில் கைது செய்வோம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனால் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து, கொலை நடந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பதால் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி, ராமஜெயத்தின் மனைவி லதா வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், 3 மாதங்களில் சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.